கண்டவர்களை எல்லாம் சுடும்படி உத்தரவிட்ட கோத்தபாயவின் மனோநிலைக்கும் ஆனர்ஸ் பிரீவிக்கிற்கும் என்ன வேறுபாடு...
நோர்வேயில் படுகொலைகளை செய்த ஆனர்ஸ் பிரீவிக் மண்டை பிழைத்த ஒருவன் என்று நோஸ்க் உளவியலாளர் அறிவித்துள்ளனர். ஆனால் படுகொலைகளை செய்த கொலையாளி போலீசார் தன்னை நெருங்கியவுடன் தனது ஆயுதங்களை வீசி கைகளை உயர்த்தி சரணடைந்துள்ளார்.
இரசாயன பாதிப்புக்கு தப்பிவிடும் ஆடைகள், உயர் போலீஸ் அதிகாரிபோல தோற்றம், உயிர்தப்புவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவற்றுடனும் கொலையாளி களமிறங்கியுள்ளார். மற்றவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நினைத்த இந்த நபர் தான் தப்பி வாழ வேண்டும் என்பதில் தெளிவான ஒருவராக இருந்துள்ளார், இவர் பைத்தியமா…?
இப்போது நடைபெறும் விசாரணைகள் இவருக்கு சிறைத்தண்டனையே வழங்க முடியாது என்று கூறுகின்றன. ஆனால் உலகப் பயங்கரவாதம்பற்றி வாய் கிழிய கத்திய மேலைத்தேய ஊடகங்கள் ஆனர்ஸ் பிரீவிக் பற்றி எப்படிக் கதைப்பது, தமது விவாதத்தை எந்தக் கோணத்தில் ஆரம்பிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கிடக்கின்றன. இவர்கள் வெறும் ஞான சூனியங்களா? என்ற கேள்வியை இவர்களுடைய தடுமாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கேள்வியை நாம் எழுப்பவில்லை இன்றைய இன்பர்மேசன் பத்திரிகை எழுப்பியுள்ளது.
கொலைஞன் ஆனர்ஸ் பிறீவிக்கிற்கின் செயலுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் யார் என்ற பட்டியலையும் அது வெளியீடு செய்துள்ளது. 1995ம் ஆண்டு அமெரிக்காவின் ரிமொற்றி மக்வெயின் என்ற கடும்போக்கு தீவிரவாதி ஒக்கலகாமா சிற்றியில் குண்டு வைத்து 168 பேரை கொன்றொழித்த நிகழ்வு, 1999 அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள உயர்நிலை பள்ளியில் 12 மாணவரையும் ஓர் ஆசிரியரையும் கொன்ற நிகழ்வு, 2005 இஸ்லாமிய தீவிரவாதிகள் பிரிட்டனில் 56 பேரை கொன்ற நிகழ்வு, 2007ம் ஆண்டு வேர்ஜீனியாவில் 30 மாணவரை கொன்ற கொலைஞனின் எண்ணங்கள், 2008 பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்வு ஆகியன ஆனர்ஸ் பிரீவிக்கின் எண்ணங்களுக்கு நல்ல உதாரணங்களாக உள்ளதாகவும் கூறியுள்ளது. சனல் – 4 ஐ பார்த்திருந்தால் அவர்கள் கோத்தபாய ராஜபக்ஷவையும் அதில் சேர்த்திருப்பர்.
இத்தகைய கடும்போக்கு தீவிரவாதம் வெறுமனே முஸ்லீம்களிடமிருந்து மட்டும் வரும், இலங்கையானால் புலிகளிடமிருந்து மட்டும் வரும் என்று மேலைநாடுகள் கருதின. அவர்கள் அறிவித்த பயங்கரவாத பட்டியலில் ஆனர்ஸ் பிறீவிக் போன்றவர்களுடைய தீவிரவாதம் வசதியாக சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள நிகழ்வு மேலை நாடுகளின் பயங்கரவாத பட்டியல் மீது எங்கோ ஒரு ஓட்டை இருப்பதை வெளிப்படையாக்கியுள்ளது.
இவ்வாரம் வெளியான சனல் 4 தொலைக்காட்சி மறுபடியும் சிறீலங்காவின் கொலைக்களம் ஒளிபரப்பின் மூன்றாவது பகுதியை வெளியிட்டது. அப்போது ஆனர்ஸ் பிறீவிக்போல அகப்பட்டவர்களை எல்லாம் கொன்று தள்ள வேண்டும் என்ற ஒருவரின் பெயர் வெளியானது, அவர்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.
அகப்படுவோரை எல்லாம் சுடும்படி இவர் உத்தரவிட்டதாக அந்தச் செய்தி தெரிவித்தது. அங்கே பொது மக்கள், போராளிகள் என்ற பேதம் பார்க்கப்படவில்லை. இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சிங்கள அரசின் வாதங்கள் முற்றாக பொய்த்துப் போய்விட்டதையும் அது சுட்டிக்காட்டியது.
உளவியல் ரீதியாக சிறீலங்கா புதுமாத்தளனில் நடைபெற்ற படுகொலைகளுக்கும், நோர்வே உற்றாயா தீவில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் பேதமில்லை என்பதை தெட்டத்தெளிவாக உணர சனல் 4 வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தது. புதுமாத்தளனில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் நோர்வேக்கும் தொடர்பிருக்கிறது. இந்த நிகழ்வு நோர்வேக்கு சில செய்திகளை சொல்லியிருக்கும் என்பதை மறுக்க முடியாது.
இனவாதமும், நிறவாதமும், கடும்போக்கு வாதமும் வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அது குற்றமே, கறுப்பரிடமிருந்து வந்தாலும் அது குற்றமே என்று கூறியவர் நெல்சன் மண்டேலா. அதுபோல கடும்போக்கு தீவிரவாதம் வெள்ளையரிடமிருந்து வந்தாலும், கறுப்பரிடமிருந்து வந்தாலும், சிங்களவரிடமிருந்து வந்தாலும் அது குற்றச் செயலே என்பதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
சிறீலங்கா போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் விசாரணைகள் சாத்தியமில்லை என்று ரணில் கூறியுள்ளார். நான் பைத்தியக்காரன் எனக்கு சிறை கிடையாது என்று ஆனர்ஸ் பிரீவிக் சொல்வதற்கும், ரணில் சொல்வதற்கும் பேதங்கள் எதுவும் கிடையாது. கொலை செய்தவன் குற்றவாளி அதை மறைக்க பைத்தியக்காரன் வேடமணிந்தவன் மாபெரும் குற்றவாளி. ஆகவே ரணிலின் பைத்திய வேடம் அவதானிக்கப்பட வேண்டிய வேடமாகிறது.
நோர்வேயின் ஆனர்ஸ் பிறீவிக்கின் செயல் சிறீலங்காவின் இராணுவத்தின் மனோநிலையோடு ஒப்பிட்டு நோக்கப்பட்டால் இரண்டும் ஒன்றே என்பதை எளிதாக விளங்கலாம். இதுவரை விளங்க முடியாதது போல நடித்த நோர்வேக்கு காலம் ஒரு கொலைஞன் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறது.
தீவிரவாதம் ஆயுதமேந்தி சர்வாதிகார வடிவில் வந்தாலும், வாக்குச்சீட்டு பெற்று ஜனநாயக வடிவில் வந்தாலும் அது தீவிரவாதமே. துப்பாக்கியால் நட்போடு சுட்டாலும் மரணமே கோபத்தோடு சுட்டாலும் மரணமே.
மேலை நாடுகள் இதற்காக என்ன விதி செய்யப்போகின்றன..
அலைகள் பயங்கரவாத ஒப்பீட்டு ஆய்வுப் பிரிவுக்காக.. 30.07.2011



0 Responses to நோர்வே படுகொலைகளும் முள்ளிவாய்க்காலும் ஊர் உளவியல் ஒப்பீடு!