முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்ள தமிழர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த பின்னரும் மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்ற சட்டவிரோத செயலாக முடியும்.
எனவே மரண தண்டனையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆயுள் தண்டனைக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் மேலும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டம் 193 உலக நாடுகளில் இருந்தது அவற்றில் 150 நாடுகளில் அந்த தண்டனை அமல்படுத்தக் கூடாது என கைவிட்டு இருப்பதாக தெரிகிறது.
அந்த வரிசையில் இந்தியாவும் மரண தண்டனையை கைவிட வேண்டும். உலக தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் 3 பேரும் தூக்கிலிடப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக புரட்சி ஏற்படும்.
பாராளுமன்றத்தை தாக்கிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அப்சல்குரு, வண்டியை வாடகைக்கு பிடித்து கொடுத்துள்ள குற்றத்தை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்.
தர்மபுரியில் மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதனால் மரண தண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சினையில் மாநில அரசு தலையிடும்போது மத்திய அரசு பணிய வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்.
தூக்குத்தண்டனையில் இருந்து அதிமுக கைதிகளையும் காப்பாற்ற வேண்டும்: திருமா
பதிந்தவர்:
Anonymous
19 August 2011
0 Responses to தூக்குத்தண்டனையில் இருந்து அதிமுக கைதிகளையும் காப்பாற்ற வேண்டும்: திருமா