Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகத்தில் தமிழ் இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு, கடந்த இரண்டரை வருடங்களாக பாரிய பணியொன்றை முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய தமிழர் பேரவை பரந்துபட்ட எம் தமிழ் மக்களை இச்செயற் திட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், சர்வதேச தலையீடு ஒன்றின் மூலம் தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

சிறீலங்காவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்ற போலி நாடகம் மூலம் காலத்தை இழுத்தடித்து, தமிழீழ அடையாளத்தை பூரணமாக இல்லாதொழிக்கும் செயற் திட்டத்தை சிறீலங்கா அரசு நிறைவேற்றி வருகின்றது.

இப்பின்னணியில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சர்வதேச தலையீட்டிற்கு வழிகோலும் பணி புலம்பெயர் தமிழர்களிடம் தான் உள்ளது.

இதற்கு மேலோட்டமான பிரச்சாரங்கள் போதுமானதன்று. ஆழமான ஆராய்ச்சியும் முழுமையான செயற்திட்டமும் காத்திரமான செயற்பாடும் இன்றி, நாம் எமது உரிமைகளையோ அல்லது எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதியினையோ பெற்றுவிட முடியாது.

எமது மக்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழீழத்தில் நிகழ்வது இனப்படுகொலை என்பதை நாம் உலகிற்கு நிரூபித்தாக வேண்டும். எமது இனம் முற்றாக சிதைக்கப்பட முன் தமிழ் மக்கள் சந்ததி சந்ததியாக சுபீட்சமான வாழ்வு வாழ நாம்தான் அவசரமாகவும் காத்திரமாகவும் செயலாற்ற வேண்டி உள்ளது.

தமிழ் மக்களிற்கு உரிமை வழங்குவதென சிறீலங்கா அரசு நடத்தும் போலி நாடகத்தினை அம்பலப்படுத்தி, தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி தமிழீழத்தில் இடம்பெறும் இன அழிப்பில் இருந்து எமது இனத்தைக் காத்திட ஒரே வழி சர்வதேச தலையீடுதான்.

இதற்காக நாம் முழுமூச்சாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. சர்வதேச விசாரணை என்பது எமது விடுதலைக்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதற்கான கருவியாகும். அதனை நிறைவேற்ற தவறுவோமாயின் நாம் எமதினத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவது இயலாத காரியம் ஆகிவிடும்.

எனவே, 2012 ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற உள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீலங்காவில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா என்ற விவாதம் நடைபெறும் சாத்தியம் உள்ளது. இதில் 47 நாடுகள் வாக்களிக்க உள்ளன.

சர்வதேச ஒழுங்கில் பிரித்தானியா முக்கியமான ஒரு நாடாகும். பிரித்தானியா எடுக்கும் தீர்மானம் மற்றைய நாடுகளின் மேல் காத்திரமான செல்வாக்கு செலுத்த வல்லது. எனவே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வைக்கும் நோக்குடன் பிரித்தானிய அரசின் இணையத் தளத்தில் மனு ஒன்று (e-petition) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவினை சமர்ப்பித்தால் எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு வலுவூட்டும்.

எம்மண்ணில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழினப் படுகொலைகளை சர்வதேச விசாரணைக்கு முன் கொண்டுவந்து, குற்றமிழைத்த சிறீலங்கா அரசை அம்பலப்படுத்தி தண்டனையை பெற்றுக்கொடுத்து எமது மக்களுக்கான நீதியினை பெறுவோம். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என உறுதி எடுப்போம்.

பிரித்தானிய தமிழர் பேரவை.

0 Responses to தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்! அழைக்கின்றது பிரித்தானிய தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com