Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறுத்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என்று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூயோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அறைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்களை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக்கையும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.

ஏப்ரல் 10ம் திகதி முதல் கட்டமாக 48 மணி நேரம் நூற்றுக்கு நூறுவீத யுத்த நிறுத்தத்தை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மக்கள் வாழும் இடங்களுக்குள் நுழைந்துள்ள கனரக வாகனங்கள் யாவும் திருப்பி எடுக்கப்பட வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து இராணுவமும் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது மக்கள் வாழும் நாடாக சகல இடங்களும் மாற்றப்பட வேண்டும்.

இவை உறுதி செய்யப்பட்டதும், கொபி அனான் முன்மொழிந்துள்ள ஆறு அம்சத்திட்டத்தை படிப்படியாக அமல் செய்ய வேண்டும். இதை கண்காணிக்கவும், சர்வதேச சமுதாயத்திற்கு தகவல்களை வழங்கவும் கொபி அனான் தலைமையிலான குழுவினர் பணியாற்றுவார்கள். ஆஸாட் றெஜீமின் அத்தனை நகர்வுகளும் அவதானிக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்படும். போர் இல்லாமலே இலக்கை எட்ட முயல்வார்கள், அதில் ஆஸாட் குழப்பத்தை ஏற்படுத்தினால் நிலமை லிபியா போல மாற்றமடையும் என்பது தெரிந்ததே. ஒரு தொகுதி அரபு நாடுகள் சிரிய போராளிகளுக்கு 100 மில்லியன் குறோணர்கள் வழங்குவதற்கு உடன்பட்டுவிட்டன.

கொபி அனான் முன்னெடுத்துள்ள அமைதிப் பணியை ரஸ்யா, சீனா, அரபுலீக், ஐ.நா உட்பட அனைத்துத்தரப்பும் வரவேற்றுள்ளன. சிரியாவில் ஏற்பட்ட முன்மாதிரி இனி பர்மா, சிறீலங்கா போன்ற நாடுகளிலும் அமலுக்கு வரும். அதேவேளை கொடுத்த காலக்கெடு முடிவடைய முன்னர் ஆஸாட்டின் படைகள் வேகமான படுகொலைகளை அரங்கேற்றியபடி உள்ளன. வடக்கு புற நகரான இடிலிப்பில் மோசமான தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர். நேற்று கொபி அனான் நியூயோர்க்கில் பேசிக்கொண்டிருக்க 14 வீடுகளை கொழுத்தி, அங்கிருந்த மக்களை கைது செய்துள்ளார்கள் என்று போராளிகள் கூறினார்கள்.

இந்த நிகழ்வை சிறிது சிறீலங்கா பக்கம் தூக்கிப் போட்டும் பார்க்க வேண்டும் :

இன்றைய சர்வதேச நகர்வுகள் சிறீலங்கா, இந்திய அரசுகளே வலுவுடையவை என்ற தமிழர் கூட்டமைப்பின் துலக்கமற்ற பார்வையும், சிங்கள இனவாதத்தின் தப்பான போக்கும் பாக்கு வெட்டிக்குள் சிக்குப்பட்டதைப் போல சிக்குப்பட வாய்ப்புக்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற கனவை யார் கண்டாலும் அவர்களுடைய எதிர் காலம் சூனியமாகும் என்பதை பர்மா, சிரியா நன்கு உணர்த்துகின்றன. இனி சிங்கள இனவாதத்திற்கும், தமிழ் ஏமாற்று அரசியலுக்கும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகக் கூறமுடியவில்லை. சிரியாவிலும், பர்மாவிலும் நடந்த நிகழ்வுகளே இதற்கு நல்ல உதாரணங்களாகும். ஜெனீவா சென்று நீதியை குழப்பியடித்த மகிந்த குடும்பமும், அங்கு செல்லாமல் இருந்து குழப்பலுக்கு துணை போன தமிழர் கூட்டமைப்பையும் சர்வதேசம் ஒன்றாகவே மதிப்பிடும் என்பதை வரும் வாரங்கள் உணர்த்த வாய்ப்புள்ளது. அனைத்து களங்கப்பட்ட அரசியல் தலைமைகளையும் உதறி இலங்கை தமிழ் மக்கள் புதிய ஜனநாயக பாதையில் அணிதிரளக்கூடிய வாய்ப்பை சர்வதேசம் ஏற்படுத்தலாம்.

அதேவேளை மியன்மாரில் ஜனநாயக தேர்தலில் ஆங்சாங் சுகி அம்மையாரின் கட்சி பெற்ற வெற்றி சர்வதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மியன்மார் மீது விதித்த தடையை அகற்ற வேண்டுமென சர்வதேச சமுதாயத்திற்கு இன்று விண்ணப்பித்துள்ளனர். ஆசியான் அமைப்பின் மாநாடு கம்போடியாவின் தலைநகர் பெனாம் பொன்னில் நடந்துள்ளது. இத்தருணம் மேற்கண்ட கருத்தை ஆசியான் தலைவர்கள் முன் வைத்துள்ளார்கள். மேலும் சுதந்திரமான தேர்தல் நடைபெற வழிவிட்ட மியன்மார் நாட்டுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com