தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கொலை செய்தவர்களை, போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். “காதல் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்று, நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஏழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்தவர், தன் மனைவியை இழந்த ஆத்திரத்தில், ராமஜெயத்தை கொலை செய்துள்ளதாக நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, தனிப்படையில் இடம் பெற்றுள்ள போலீசார் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் காதலித்த பெண்ணுடன், ராமஜெயத்திடம் அடைக்கலமாகியுள்ளார். அந்த பெண், வேறு சமூகம் மற்றும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்த ஜோடிக்கு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, ராமஜெயம் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள், திருச்சி தில்லை நகர் நான்காவது கிராசில் வீடு பிடித்து வாழ்க்கையைத் துவக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.அந்த பஞ்சாயத்தும் ராமஜெயத்திடம் வந்துள்ளது. பஞ்சாயத்தின் இறுதியில் அந்த இளைஞர், மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதே சமயம், அந்த பெண், ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில் நான்காவது கிராசிலேயே வசித்துள்ளார்.இப்படிப்பட்ட சூழலில் தான் கொலை நடந்துள்ளது. கொலை நடந்த விதமும், தூத்துக்குடி மாவட்ட கூலிப்படையினரின் பாணியிலேயே நடந்துள்ளது. இதை நாங்கள் கண்டுபிடித்து, அந்த பெண்ணைத் தேடிய போது, அவர் தலைமறைவாகி விட்டார். அவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
ஆகையால், மனைவியை இழந்த விரக்தியில், அந்த இளைஞரோ, அவரது உறவினர்களோ அல்லது அவர்களது நண்பர்களோ கூலிப்படையினரின் உதவியோடு ராமஜெயத்தை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களை குறிவைத்து தேடி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.அதே சமயம், திருச்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவரும், ராமஜெயத்தின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ராமஜெயம் காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணும் கணவனைப் பிரிந்துள்ளார். அவர் மீதும் சந்தேகம் உள்ளது. கொலை நடந்த பின்னும் அவர் எப்போதும் போல் இருந்து வருகிறார். அந்த பெண்ணின் மீதும் எங்களது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. மொத்தத்தில் ராமஜெயம் கொலையானது, பெண் தொடர்பு காரணமாகத் தான் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தையே உலுக்கிய ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டனர். ஆகையால், இரண்டொரு நாளில் கொலையாளிகள் போலீசாரால் அடையாளம் காட்டப்படுவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.அதே சமயம், போலீசார் உண்மையான குற்றவாளிகளை பிடிப்பதற்காக, ராமஜெயத்துடன் தொடர்டைய சில சம்பவங்களை, தாங்களாகவே முன்வந்து கசிய விட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
0 Responses to ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம் பெண் தொடர்பு