இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜூலை 1, 2002-இல் உருவாக்கப்பட்டதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம். இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.
121 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா, சிறிலங்கா போன்ற நாடுகள் உறுப்பினர்களாக சேரவில்லை. இருந்த போதிலும் இந்நாடுகள் செய்யும் குற்றங்களுக்கு உறுப்பு நாடுகளின் குடிமக்களாகவோ, உறுப்பு நாடுகளில் குறித்த நபர் குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது ஐ.நாவின் பாதுகாப்புச் சபையோ குற்றத் தாக்கலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் வைக்கலாம்.
இந்நீதிமன்றம் ஐ.நாவுடன் இணைந்து செயற்பாடுகளை செய்தாலும், இது ஐ.நாவின் சட்ட வரைமுறைகளுக்கு ஏற்ப நிறுவப்பட்டதில்லை. பலர் இந்நீதிமன்றம் ஐ.நாவின் சட்ட யாப்பின் அடிப்படையின் கீழே உருவாக்கப்பட்டு, ஐ.நாவின் ஒரு அங்கம் என்றே கருதுகிறார்கள்.ஐ.நாவினுடைய சர்வதேச சட்ட கோட்பாடுகளை உள்வாங்கியே இந்நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீர்ப்புக்களை வழங்கினாலும், இது ஒரு தனியான அமைப்பே.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தில் வைத்துத்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் அல்ல. இந்நீதிமன்றம் விரும்பினால் ஏதாவதொரு உறுப்பு நாடொன்றில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.
இதுவரை இந்நீதிமன்றம் சூடான், உகாண்டா, கொங்கோ, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கென்யா, லிபியா போன்ற 15 சம்பவங்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகளை எடுத்தாலும், ஏழு சம்பவங்களுக்கு மட்டுமே கடந்த பத்து வருடங்களில் தண்டனை வழங்கியுள்ளது.பன்னிரண்டு நபர்களுக்கு கைது ஆணைப்பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
சமீப வருடங்களாக இந்நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் அதிகரித்துள்ளன. ஒரு நாட்டின் சட்ட வரைமுறையின் கீழ் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன. இந்நீதிமன்றங்களினால் சர்வதேச சட்டங்களை மீறுபவர்களை தண்டிக்க முடியாது. ஐ.நா வெறும் அறிக்கை வெளிவிடும் அமைப்பாகவே இருக்கிறது.
ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் அனைத்துலக படைகளை தேவை ஏற்படின் அனுப்பும் வல்லமை மட்டுமே ஐ.நாவுக்கு இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் அமெரிக்க மற்றும் அதனுடைய நேச நாடுகள் கூட ஐ.நாவின் ஒப்புதல் இன்றி ஈராக் போன்ற நாடுகளில் தமது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டன.
ஐ.நாவினால் குறித்த வல்லரசுகளுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாமல் போனது. வெறும் கண்டன அறிக்கையுடன் நின்றது ஐ.நா. இப்படிப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் பல்வேறு விதமான அமைப்புக்கள் மற்றும் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது ஐ.நா. இப்படிப்பட்ட நிலையிலேயே, சர்வதேச நீதிமன்றத்தின் செயற்பாடுகள் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
சமீப தீர்ப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை
போர்க்குற்றம் சாட்டப்பட்ட லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லருக்கு 50-ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது இந்நீதிமன்றம்.சியர் லியோனுக்கான சிறப்பு நீதிமன்றமே இவருக்கு இத் தண்டனையை வழங்கியுள்ளது.
1991-2002 காலப்பகுதியில் நடந்த உள்நாட்டு போரின் போது சியர் லியோனில் இயங்கிய ஆயுதக்குழுவினருக்கு உதவிகளும் ஒத்துழைப்பும் வழங்கியதற்காக ஏப்ரல் 2012-இல் சார்ல்ஸ் டெய்லர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
நீதி வேண்டியவர்களின் தரப்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் டெய்லருக்கு 80 ஆண்டுகால சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் அந்தத் தண்டனைக் காலம் மிக அதிகமானது என்று சார்ல்ஸ் டெய்லர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருந்தார்கள்.
அவருக்கு எதிராக படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் என பல மோசமான போர்க்காலக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. சமீபத்தில் கொங்கோ கிளர்ச்சிக்குழுவின் தலைவரான தோமஸ் லுபாங்கா போர்க் குற்றம் புரிந்துள்ளதாக தீர்ப்பளித்தது.
சிறுவர்களை தனது படையில் சேர்த்தமையால் அவர் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக இந்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 51 வயதான லுபாங்கா11 வயதான இளம் பிள்ளைகளையும் வீடுகள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்களிலிருந்து கடத்திச் சென்று 1999 முதல் 2003 வரை கொங்கோவில் இடம்பெற்ற யுத்தத்தில் போராடவும் கொடுமைகளைப் புரியவும் அவர்களை நிர்ப்பந்தித்தாகவும் இளம் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இவருக்கான தண்டனை என்னவென்பதை எதிர்வரும் அமர்வில் நீதிபதிகள் தாமஸ் லுபாங்ககாவுக்கான தண்டனையை அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ருவான்டாவில் போர்க் குற்றங்கள் புரிந்த மதகுருவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை சமீபத்தில் வழங்கி தீர்ப்பளித்தது இந்நீதிமன்றம்.
ருவாண்டா ஆயுதப் படைகளின் மதகுருவாகப் பணியாற்றிய இம்மானுவல் ருகுண்டோ மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலைகள் உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
1993-இல் ருவாண்டா ஆயுதப் படைகளின் மதகுருவாக நியமிக்கப்பட்ட இம்மானுவெல் ருகுண்டோ 1994 மே மாதம் கிகாலியில் பணியாற்றிய போதே மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அடுத்தது சிறிலங்காவா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளுக்கும்விட அதிகமாகவே குற்றங்களை புரிந்துள்ளவர்கள் சிறிலங்காவில் இருக்கிறார்கள்.
இந்நீதிமன்றத்தின் அடிப்படை சாசனமான ரோம் சாசனத்தில் கைச்சாத்து இடாத நாடுகளுக்கு எதிராக இந்நீதிமன்றத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை சாக்காக வைத்தே ஆட்டம் போடுகிறார்கள் மகிந்தா போன்ற போர்க் குற்றவாளிகள்.
இதனிடையே பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் சமீபத்தில் புரிந்துணர்வு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஆகவே இது சிறிலங்காவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களும் தண்டிக்கப்படலாம் என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.
பொது நலவாய நாடுகளின் உறுப்பினர்கள் அனைவருமே பொது நலவாய நாடுகள் அமைப்பு கைச்சாத்திடும் அனைத்து ஒப்பந்தங்களையும் மதிக்க வேண்டுமா அல்லது இவ் அமைப்பிலிருந்து வெளியேறுவார்களா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிறிலங்கா பொது நலவாய நாடுகளின் உறுப்பு நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவினாலே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக சர்வதேச நீதிமன்றம் கவனத்தில் எடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாக இவர்கள் போன்ற குற்றவாளிகள் மீண்டும் வளராமல் இருக்க உதவியாக இருக்கும் என்பதே பலருடைய கருத்து.
ஐ.நா போன்ற அமைப்பு உலக அரசுகளுடன் ஒப்பந்தங்களை செய்து உலக நாடுகளுடன் ஒருமித்த கருத்துணர்வை உண்டுபண்ண உதவியாக இருக்கிறதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் நீதியைப் பெற்றுத்தர உதவியாக இருக்கவில்லை.
இயற்கை சீற்றங்களினாலும் மற்றும் போரினாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு பல மனிதாபிமான உதவித் திட்டங்களை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறது ஐ.நா. என்பதனை யாரும் மறுக்க முடியாது.ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதன் மூலமாகவேதான் எதிர்காலத்திலும் குறித்த சம்பவங்கள் இடம்பெறாது.
அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்காவின் அரச தலைமையும் இராணுவத்தின் முக்கிய தளபதிகளுமே பொறுப்பு. அரச பயங்கரவாதிகளை இனம் கண்டு உலக நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர ஐ.நாவினால் முடியும்.
ஐ.நா நேரடியாகவே நடந்த சம்பவங்களை விசாரித்து போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத்தர சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு ஏற்ற சாட்சியங்களை தயார்ப்படுத்தி ஐ.நாவின் பாதுகாப்புச் சபையினால் சிறிலங்காவில் இருக்கும் போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான மனுவை முன்வைப்பதன் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும்.
கடந்த சமீப காலமாக சர்வதேச நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் உட்சாகமளிப்பதாகவே இருக்கிறது. இதனுடைய செயற்பாடுகள் பரந்துபட்டு உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நீதி வழங்கும் நீதிமன்றமாக வளர வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும்.
nithiskumaaran2010@gmail.com
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மற்றுமொரு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு: அனலை நிதிஸ் ச. குமாரன்
பதிந்தவர்:
தம்பியன்
06 June 2012



0 Responses to சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மற்றுமொரு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு: அனலை நிதிஸ் ச. குமாரன்