புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைத்துள்ளது என்றும் பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற ஊழல் போக்கிற்கு வாக்காளர்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சூளுரைத்து களம் இறங்கினர். இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் 30,500 (21.3%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினர்க்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
எந்த எதிர்க்கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூக்குரல் எழுப்பினார். ஆனால் புதுக்கோட்டை வாக்காள பெருமக்கள் தே.மு.தி.கவிற்கு டெபாசிட் தந்ததோடு மட்டுமல்ல, அதற்கு மேலாக ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடிதான் இந்த தேர்தல்.
பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி விட்டு, பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற ஊழல் போக்கிற்கு 30,500 (21.3%) வாக்காளர் பெருமக்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.
எனது தலைமையிலான ஆட்சி என்றும், ஓராண்டு சாதனை என்றும் மக்கள் வரிப் பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் தேடிக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதை கண்டு வெறுப்புக்கும், வேதனைக்கும் ஆளாகிய புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் இந்த தேர்தலில் இந்த விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தன்னைத் தவிர வேறு அரசியல் தலைவரோ, தனது கட்சியை தவிர வேறு அரசியல் கட்சியோ இருக்கக் கூடாது என்ற சர்வதிகாரப் போக்கிற்கு புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் சாவு மணி அடித்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 June 2012



0 Responses to சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!