அமெரிக்காவிடம் இரகசியமாகக் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயல்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்து மாறு அரசிடம் கோர வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் ஐ.தே.க. கோரியுள்ளது.
இது தொடர்பாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மே 18ஆம் நாள் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியை சந்தித்தபோது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சமர்ப்பித்த செயற்திட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கோ பொதுமக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் சபைத் தீர்மானத்தை அடுத்து அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த இரகசிய செயற்திட்டத்தை முதலில் நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும். தேசிய விவகாரங்களில் இரகசியமான பேரங்கள் இருக்க முடியாது.
அமெரிக்கா, ஐ.நா அல்லது வேறு வெளிநாட்டு அமைப்புகளுக்கு இரகசிய உறுதிமொழிகளை வழங்குவதற்கு முன்னர், செயற்திட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே பொருத்தமானது. என்று அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Responses to இரகசியமாக கொடுத்த அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள்