மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த லண்டனின் Park Lane Hilton நட்சத்திர விடுதிக்கு முன்பாக நேற்று தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், பலத்த பாதுகாப்புட அவர் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிர்த்தானிய மகாராணியாருக்கான விருந்துபச்சாரத்தில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அனுமதியை பிரித்தானிய அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கைகளில் பதாகைகள் மற்றும் கொடிகளுடன் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 6 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், 30க்கு மேற்பட்ட ராஜபக்சவின் ஆதரவாளர்களும் குறித்த வளாகத்தில் கூடியிருந்ததுடன் அவர்கள் இலங்கை தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஜனாதிபதிக்கு ஆதரவான பதாகைகளை கொண்டு கோஷமெழுப்பினர்.
இந்நிலையில் நேற்று மாலையளவில், ஹோட்டலிருந்து கார் மூலம் ராஜபக்ச அவரது மனைவியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஹோட்டலில் இருந்து ஜன்னல் வழியாக இருவர் ஆர்ப்பாட்டத்தை வீடியோ படம்பிடித்து கொண்டிருந்ததாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
நாளை புதன்கிழமையும் ராஜபக்சவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி தொடரவுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். காமன் வெல்த் பிசினஸ் கவுன்சிலில், காமன்வெல்த் எகோனமிக் ஃபோரம் ஒழுங்கு செய்துள்ள நிகழ்வில், நாளை புதன்கிழமை ராஜபக்ச சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மேலும் அன்றைய தினம், வால்புரூக் காமன்வெல்த் புதிய செயலகம் திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இதையொட்டி நாளை காலை வால்புரூக் மேன்சன் ஹவுஸ் (Wallbrook, Mansion House) இல் மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இதில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என ஒருங்கிணைப்பு குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
0 Responses to லண்டன் ஹில்டன் ஹோட்டல் முற்றுகை : பாதுகாப்புடன் மகிந்த வெளியேற்றம்