இலங்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற மனிதவுரிமை மீறல்கள், இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்கள் ஆகியவற்றை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் பணியின் தொடர்ச்சியாக ஜெர்மனியின் டோட்முண்ட் நகரில் கடந்த 2ஆம் திகதி “உண்மையின் சாட்சியங்கள்” என்ற பெயரில் நிழற்படக் கண்காட்சி நடைபெற்றது.
பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிழற்படக் கண்காட்சியில், இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாத அரசுகள் மேற்கொண்டு வரும் வன்மறைகளை படம் பொட்டுக காட்டியிருந்தனர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்மக்கள் மீது காலாகாலமாக மேற்கொண்டு வருகின்ற இன ஒடுக்குமுறைகளினால் சிறுவர், பெண்கள், முதியவர்கள் என எந்த வித்தியாசமுமின்றி கொல்லப்பட்ட, அங்கவீனர்களாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, விதவைகளாக்கப்பட்ட அந்தமக்களின் காட்சிகள்.
தாயகத்தில், வானமே கூரையாகக் கொண்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் சொல்லொனாத் துன்பத்தை அனுபவித்துவரும் காட்சிகளையும், அவர்களது பொருளாதார வளங்கள் மற்றும் மருத்துவமனைகள், பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் என எல்லாமே அழிக்கப்பட்டு சுடுகாடாகக் காட்சியளிக்கும் அவர்களது வாழ்விடங்களின் காட்சிகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மக்கள் அதிகமாகக் கூடும் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த இப் புகைப்படக் கண்காட்சி அதிகமான மக்களின் கவனத்தையீர்த்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றைப் பார்வையிட்ட பலர் இவற்றுக்கான விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் தங்கள் கருத்துக்களையும் கவலைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இவற்றைவிட சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக் களம் விபரணப் படம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் எரிப்பு பற்றிய விபரணப் படம் ஆகியவை தொடர்ச்சியாக மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
மாலை ஏழு மணி வரை நடைபெற்ற இப்புகைப்படக் கண்காட்சி இங்குள்ள மக்களுக்கு எம் தாயகத்து நிலைமையை தத்துவரூபமாக எடுத்து விளக்கப் பெரிதும் உதவியிருந்தது.
0 Responses to உண்மையின் சாட்சியங்கள்: நிழற்படக் கண்காட்சி (படங்கள் இணைப்பு)