கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனையை அமெரிக்காவிடம் இலங்கை அரசு நேரடியாகக் கையளித்திருப்பது தொடர்பில் இந்தியா சீற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.
இவ்விடயத்தில் தமது அதிருப்தியை கொழும்பிடம் புதுடில்லி இராஜதந்திர வழிமுறைகளில் தெரிவித்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவந்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனீவா மாநாட்டின் தீர்மானங்களுக்கு இசைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசின் திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் கையளித்திருந்தார்.
ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்காவுடன் நேரடியாகவே தொடர்புகொண்டு இவ்வாறான விடயங்களை இலங்கை அரசாங்கம் கையாள்வதையிட்டு இந்தியா கடும் சீற்றமடைந்திருக்கின்றது. இது தொடர்பில் தமது அதிருப்தியை இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா தெரியப்படுத்தியிருக்கின்றது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட போது, அதனை மென்மைப்படுத்த இந்தியா பெரிதும் உதவியது. ஆனால், இப்போது இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு அமெரிக்காவுடனான விடயங்களை நேரடியாகவே கையாள்வதற்குக் கொழும்பு முற்பட்டிருப்பது புதுடில்லிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்தியா இராஜதந்திர முறையில் தமது அதிருப்தியைத் தெரியப்படுத்தியிருக்கின்றது. இருந்த போதிலும் இலங்கை அரசிடமிருந்து இதற்கான பிரதிபலிப்புக்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. அண்மைக்காலமாக இந்தியாவைப் பறக்கணிக்கும் வகையில் இதனைவிட மேலும் பல விடயங்களில் இலங்கை செயற்பட்டுவருவது தொடர்பாகவும் இந்தியா அதிகளவுக்குக் கவலையடைந்திருப்பதாகவும் தெரிகின்றது.
அமெரிக்காவிடம் கொடுக்கப்பட்ட அறிக்கை குறித்து இலங்கை மீது இந்தியா கடும் சீற்றம்!!
பதிந்தவர்:
தம்பியன்
08 June 2012



இதுவும் வேண்டுமடா...
இன்னமும் வேண்டுமடா...