நேற்று திங்கட்கிழமை உலகின் முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நகரமான ஜப்பானின் ஹிரோஷிமா, தான் அழிக்கப்பட்டு 67 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூர்ந்துள்ளது.
கடந்த வருடம் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை, கதிர்வீச்சு தாக்கத்தின் அகோரம் உணரப்படும் ஃபுக்குஸிமா அணு உலை விபத்தை அடுத்து அணு சக்தி மற்றும் ஆயுதம் மீது எதிர்ப்பு அலைகள் பொது மக்களிடம் பரவி வரும் இவ்வேளையில் இந்நினைவு கூறல் நிகழ்வு நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடாந்த நினைவு கூறல் வைபவம் ஹிரோஷிமாவின் சமாதானப் பூந்தோட்டத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா தலைமயில் சுமார் 50 000 பொது மக்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. இம்மக்களில் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட அடங்குவர். இந்த நினைவுகூறல் மணியடிக்கப் பட்ட பின் மௌன அஞ்சலியுடன் தொடங்கியது.
இவ்வஞ்சலியின் பின்னர் ஹிரோஷிமா ஆளுநர் கஷூமி மட்சுயி உரையாற்றுகையில் ஜப்பான் அரசு பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க சக்திக் கொள்கையை கையாள முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
அமெரிக்காவால் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு மொத்தம் 140 000 பொது மக்களைப் பலி வாங்கியதுடன் அடுத்த சில நாட்களில் கதிர் வீச்சின் வீரியம் காரணமாகவும் பலர் மரணமடைந்திருந்தனர். இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பின்னர் ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு 70 000 பேரை பலி வாங்கியிருந்தது.
இதனை அடுத்து 6 நாட்கள் கழிந்து ஜப்பான் 2 ஆம் உலக மகா யுத்தத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிரோஷிமா அணு குண்டுத் தாக்குதலின் 67 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்த ஜப்பான்
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2012
0 Responses to ஹிரோஷிமா அணு குண்டுத் தாக்குதலின் 67 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்த ஜப்பான்