Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ்நாட்டின் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐயத்தின் பேரிலும், ஈழத்திற்கு மண்ணெண்ணை, இரத்தம் கடத்தினார்கள் என்ற பெயரிலும் பல ஈழத் தமிழ் சொந்தங்கள் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் பிணைய விடுதலை பெற்ற நிலையிலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களை நடத்திவிட்டது.
 
அவர்களும் பல முறை இப்படி சாகும்வரை பட்டிணிப் போராட்டம் நடத்தி, அதனால் உடல் நிலை, மன நிலை பாதிக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றனர். அவ்வப்போது சிலரை விடுவித்தது தவிர, பெரும்பாலோர் இன்னமும் தனிமை சிறையில் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் எதிரொலியே இப்போது மீண்டும் பட்டிணிப் போராட்டம் நடந்து வருகிறது. இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்ற உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும், மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆனால் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல், நமது ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு எதிரான தனது அராஜகமாக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில், காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டுஇ கடந்த 2 ஆண்டுகளாக வெளியில் வாழ்ந்துவந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது க்யூ பிரிவு.

இலங்கையின் உளவுத் துறையுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி) ஆலோசனையின் பேரிலேயே இவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இவை யாவும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளாகும்.

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடையும் நமது சொந்தங்களை, சிங்களத்திற்கு இணையாக சித்தரவதைக்கு உள்ளாக்குகிறது க்யூ பிரிவு.

அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பது, நகைகளை பறிப்பது, பாலியல் உறவுக்கு அழைப்பது, இணங்க மறுத்தால் சிறப்பு முகாமில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவது என்று அதன் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் தமிழக முதல்வர், மற்றொரு பக்கத்தில் க்யூ பிரிவால் அவர்கள் வதைக்கப்படுவதை தடுத்த நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பிறகாவது க்யூ பிரிவின் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் நடத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com