பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், தலிபான்கள் எச்சரித்தது போன்றே இன்று குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது.
கராச்சியில் இன்று காலை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதே போன்று வடமேற்கு நகரமான பேஷ்வாரில் வாக்குச்சாவடியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தேர்தல் வரலாற்றில் மிகவும் இரத்தக்கறை படிந்த தேர்தலாக இதனை அரசியல் அவதானிகள் வர்ணிக்கின்றனர். இதுவரை நிகழ்ந்த தேர்தல் வன்முறைகளில் சுமார் 130க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு என்பவற்றின் மூலம் இவர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.
இம்முறை பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மிகவும் செல்வாக்கு செலுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானின் இரு பிரதான கட்சிகளுக்கும் மிகவும் சவாலாக விளங்குகிறார். குறிப்பாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் சார்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இரு தடவை ஆட்சியிலிருந்த நவாஷ் ஷரிப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், பாகிஸ்தான் ஜனாதிபதியான அசிஃப் அலி சர்தாரி ஆகியோருக்கு இம்ரான் கான் மாற்றுச்சக்தியாக திகழ்கிறார்.
இம்ரான் கானுக்கு வாக்களிப்பதன் மூலம் பாகிஸ்தானில் புதிய அரசியல் பாதையை திறந்துவிடலாம் என மக்களும் நம்புகின்றனர். இதே வேளை வடக்கு வார்சிஸ்தானில் பெண்கள் எவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க குடாது என ஒலிபெருக்கியில் பகிரங்கமாக இஸ்லாமிய பள்ளிவாசலொன்று அறிவித்துள்ளதாக அங்கு நிலைகொண்டிருக்கும் ஏ.எஃப்.பி ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்தலையொட்டி கடும் வன்முறை நிகழ்கின்ற போதும், பாகிஸ்தானின் முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று தேர்தலை நிகழ்த்துவதால் மக்களின் வாக்களிப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
மூன்று முறை பாகிஸ்தான் இராணுவ சதிப்புரட்சியின் கீழ் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டிருந்ததால் இம்முறையாவது ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்து தமது தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
0 Responses to பாகிஸ்தானில் இன்று தேர்தல் : தலிபான்கள் எச்சரித்தது போன்றே குண்டுத்தாக்குதல் 10 பேர் பலி