சரப்ஜித் சிங்கின் மரணம் தன்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவர் துயரம் தாங்கும் மனோபலம் கொண்ட இந்தியாவின் வீரமகன் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் கவலை வெளியிட்டுள்ளார்.
'சரப்ஜித் சிங் மீது கொடூரத்தனமகா தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். சரப்ஜித் சிங் தொடர்பில் இந்தியா விடுத்திருந்த எந்தவொரு கோரிக்கை மனுவுக்கும் பாகிஸ்தான் செவி சாய்க்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர், இந்திய பாகிஸ்தான் சிவில் சமூகம் என்பன இந்த விடயத்தை மனிதாபிமான ரீதியில் பார்க்க வேண்டும். மரணத்திலாவது சரப்ஜித் சிங்கிற்கு நிம்மதி கிடைக்கும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தீவிரவாதி எனும் குற்றச்சாட்டில் 22 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த சரப்ஜித் சிங், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு லாகூரில் சக சிறைக்கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் கடந்த சில நாட்களாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்து நேற்றிரவு மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரப்ஜித் சிங்கின் பூதவுடலை வாஹா வழியாக அமிர்தசரஸுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அரசு இதற்கு சம்மதித்து உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சரப்ஜித் சிங்க் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதோடு, சரப்ஜித் சிங் குடும்பத்தினருடன், அனைவரும் மனிதாபிமானத்துடன் அணுகி நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஷிண்டேவிடம் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் சரப்ஜித் சிங்கை தியாகியாக அறிவித்து அவரை சிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. சரப்ஜித் விடுதலைக்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளி கிளப்பியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரப்ஜித் சிங் சொந்த ஊரான பஞ்சாபில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி, சரப்ஜித் சிங்குக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு, கலவரம் எதுவும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சரப்ஜித் சிங்கை காப்பாற்ற பலவீனமான மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு முதல் காரணம் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகள் எதுவுமே இந்தியாவுக்கு எதிராக செயற்படக்கூடாதவை. ஆனால் இங்கு எவையுமே நட்பு நாடுகள் இல்லை. இந்திய மக்கள் எப்படி இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசின் கீழ் பாதுகாப்பானவர்களாக உணர முடியும். இந்த அரசை மாற்றுவது மட்டுமே, பாதுகாப்பான இந்தியா எனும் ஒரே ஒரு பாதைக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை டெல்லியில் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். சரப்ஜித் சிங்கின் மரணம் இந்திய - பாகிஸ்தான் நல்லுறவை பாதித்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குரிஷித் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசு ஒரு வழியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகர், பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற மிக நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Responses to சரப்ஜித் சிங் இந்தியாவின் 'வீர மகன்' : இப்போது புகழாரம் சூட்டுகிறார் பிரதமர்