பீஹாரில் உள்ள அரச ஆரம்பப் பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவி விஷமானதால் பலியான சிறார்களின் எண்ணிக்கை இதுவரை 22 ஆக உயர்வடைந்துள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப் பட்ட போலிஸ் விசாரணையில் பரிமாறப் பட்ட உணவில் பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப் பட்டிருந்ததே காரணம் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பீஹார் மாநிலம் சாப்ரா அருகே தரம்சதி கிராமத்திலேயே இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இதன்போது பரிமாறப்பட்ட உணவில் ஆர்கானோபாஸ்பேட் என்ற அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மீது தெளிக்கப் படும் பூச்சிகொல்லி மருந்து கலக்கப் பட்டுள்ளது. இது எப்படியெனில் இப்பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தப் பட்ட பாத்திரம் முறையாகக் கழுவப் படாமல் அதில் உணவு பரிமாறப்பட்டதாகவும் இதனாலேயே அந்த உணவு நச்சுத் தன்மை அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
இது வேண்டுமென்று நிகழ்த்தப் பட்டதா அல்லது கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்தா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேவேளை பள்ளிச் சிறுவர்களின் இந்த மரணத்தினை அடுத்து பீஹாரில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகளவான ஆர்ப்பாட்டக் காரர்கள் பொது வேலை நிறுத்தத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் 2001 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி அனைத்து அரச பள்ளிகளிலும் 13 வயதுக்குக் குறைவான மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் வழக்கம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to பீஹாரில் பூச்சி மருந்து கலக்கப் பட்ட உணவை உண்டதால் பலியான சிறார்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு