தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இருவேறு பிரிவினரை சேர்ந்த திவ்யா-இளவரசன் ஜோடியில், இளவரசன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இவரது உடல் தர்மபுரியில் உள்ள ஒரு கிராமத்தில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தலித் இளைஞனான இளவரசன், வேறு பிரிவினரைச் சேர்ந்த திவ்யாவை காதலித்து, பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அத்தோடு, தர்மபுரியில் இரு வேறு பிரிவினருக்கு இடையே பல கலவரங்கள் மூண்டது. வன்முறை தூண்டிவிடப்பட்டது. இதற்கிடையில் அவ்வூரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் இருமாதங்களுக்குப் பிறகு தாயுடன் வந்துவிட்ட திவ்யா, "எனக்கு எனது தந்தையின் நினைவும், ஊரில் நடந்த கலவரமும் எப்போதும் நினைவில் இருந்து கொண்டு இருந்ததால் என்னால் இளவரசனுடன் வாழ முடியவில்லை, அவர் மீது ஆசையும் எனக்கு தோன்றவில்லை. எனவே எனது அம்மாவுடன் வந்துவிட்டேன். இனி இளவரசனுடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை." என்றும் கூறியுள்ளார்
இந்நிலையிலேயே இன்று மதியம் இளவரசனின் உடல் தர்மபுரியில் உள்ள ஒரு கிராமத்தின், தண்டவாளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டைப்பையில் இரண்டு கடிதங்கள், தண்டவாளம் அருகே அவருடைய மோட்டர் பைக், கைப்பை ஆகியவற்றையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இளவரசனின் சாவில் மர்மம் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஊரில் வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது இளவரசன் மரணமடைந்துள்ளதால் தர்மபுரியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
0 Responses to தருமபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் திடீர் மரணம்