கையாலாகாத ஒபாமாவும், புற்றினும் நடாத்தும் பனிப்போர் சீனாவுக்கே நன்மை தரும்..
20 ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த அமெரிக்கா – ரஸ்யா நாடுகளிடையேயான பனிப்போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என்ற விவாதங்கள் ஐரோப்பிய உயர் மட்டங்களில் இப்போது பேசப்படுகிறது.
சிரியாவிற்கு வழங்கும் ஆயுதங்களை நிறுத்த ரஸ்யா அடியோடு மறுத்துவிட்டது, மேலும் ரஸ்ய அதிபர் சிரியா அதிபர் ஆஸாட்டுக்கு வழங்கும் ஆதரவால் அந்தப் பிரச்சனையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவால் முடியவில்லை.
இது தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த முறுகல் நிலை தற்போது எட்வேட் சுனோவ்டனுக்கு ரஸ்யா அடைக்கலம் வழங்கியதைத் தொடர்ந்து மேலும் முறுகல் நிலைக்கு சென்றுள்ளது.
ஈராக்கில் அமெரிக்காவை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், சிரியா டமாஸ்கசிற்கும் தொடர்பிருப்பதாக சற்று முன் அமெரிக்கா அதிகாரி மார்டின் டெம்சிலி தெரிவித்துள்ளார்.
இதனுடைய மறு பொருள் டமாஸ்கஸ் – பாக்தாத் வரையான நேர்கோட்டு அச்சு அமெரிக்காவிற்கு எதிராக சுழல்கிறது, இதற்கு ஆதார சுருதியாக இருப்பது ரஸ்யா என்பதாகும்.
சென்ற வாரமே அமெரிக்க அதிபரும், ரஸ்ய அதிபரும் சந்திக்க இருந்த தனிநபர் சந்திப்பொன்றையும் அமெரிக்க அதிபர் திடீரென இடை நிறுத்தம் செய்திருந்தார்.
முன்னாள் அதிபர் டிமிற்ஜி மிடேவ் காலத்தில் இருந்த அமெரிக்க – ரஸ்ய நல்லுறவு புற்றின் அதிபராக மீண்டும் வந்த பின்னர் கெட்டுப்போய்விட்டதாக ஒபாமா தெரிவித்திருந்தார்.
அன்று அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்டபோது அமெரிக்கர்களை விட அதிகம் கதறி அழுதவர்கள் ரஸ்யர்களே.. இன்று அந்த நிலை ரஸ்யாவில் இல்லை.
ரஸ்ய அதிபர் புற்றினின் புதிய ஆட்சி அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுக்கு ரஸ்யாவில் மறுபடியும் புத்துயிர் கொடுத்துள்ளதாகவும் ஒபாமா எச்சரித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ரஸ்யாவுடன் நட்பாக இருக்கும் கொள்கையில் அமெரிக்கா ஓர் இடைவேளையை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே மனித உரிமைகள், ஏவுகணைத் தொழில் நுட்பம், சிரிய விவகாரம், சுனோவ்டன் விவகாரம் ஆகிய நான்கு விடயங்களில் பாரிய வேற்றுமை நிலவுகிறது.
இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் தேநீர் இடைவேளை 21ம் நூற்றாண்டின் புதிய பனிப்போருக்கான தொடக்கமா என்பதே இப்போது கேள்வியாகும்.
வரும் செப்டெம்பர் நடைபெறவுன்ள ஜி 20 மாநாட்டில் ஒபாமா இந்த விடயத்திற்கு ஒரு தீர்க்கமான முடிவை தொட்டாக வேண்டியுள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர் பனிப்போர் 21ம் நூற்றாண்டு முழுவதும் தொடராது என்றும் புற்றின் ஆட்சியில் இருக்கக்கூடிய 12 வருடகால பனிப்போராகவே இருக்கும் என்கிறார்கள்.
ஓரினச்சோர்க்கைச் சட்டமூலம், உள்நாட்டில் நடாத்தும் சர்வாதிகார ஆட்சி, பொருளாதார சிக்கல், பதவி மோகம் போன்றவை தொடர்பாக புற்றினுக்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்புக்கள் நிலவுகிறது.
ஆகவேதான் அமெரிக்கா மீதான ஓர் எதிர்ப்பை வளர்த்து ரஸ்யர்களுடைய கவனத்தை திசை திருப்புவது அவருடைய ஆட்சிக்கட்டிலுக்கு இப்போது தேவைப்படுகிறது.
சொந்தத் திறமையால் நாட்டில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாத புற்றினுக்கு அமெரிக்க எதிர்ப்பே தற்போதைக்கு பாரிய துரும்புச் சீட்டாக இருக்கிறது.
இப்படி செலவில்லாமல் உள்நாட்டுச் சிக்கலை வெற்றி கொள்ள முயலும் புற்றின் அதுபோல வெளிநாட்டு விவகாரத்திலும் ஒரு மலிவு வெற்றியை குறி வைக்கிறார்.
உலக அரங்கில்..
சீனா பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் அபார வளர்ச்சிகண்டு உலகின் முதலிடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
சீனாவின் விண்கலம் உண்மையாகவே மனிதனுடன் சந்திரனுக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்..
பொருளாதார ரீதியாக போட்டியிட்டு சீனாவை முந்தவும் ரஸ்யாவுக்கு வழிகள் எதுவும் கிடையாது.
அமெரிக்காவுடனான பனிப்போரை உருவாக்கி, அமெரிக்க எதிர்ப்பாளராக மாறுவதே சீனாவை முந்திச் செல்ல செலவில்லாத பாதையாக புற்றினுக்கு இருக்கும்.
ஆகவே இரு வழியிலும் சிக்கல் இல்லாமல் இருக்க அமெரிக்க எதிர்ப்பு அவசியம், எட்வேட் சுனோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த கதையும் இதற்குள் அடங்கும்.
ஆகவே போலியான பனிப்போர் தொடரும் என்பது நிஜம்தான்..
ரஸ்யப் பனிக்கரடியின் மூளையை 12 ஆண்டுகள் திசைதிருப்ப புற்றின் இந்தப் போலியான பனிப்போரை தொடர்வார்..
கையாலாகாத ஒபாமாவுக்கும் அது தேவைப்படுகிறது..
கையாலாகாத ஒபாமாவும், புற்றினும் நடாத்தும் பனிப்போர் கடைசியில் சீனாவுக்கே நன்மை தரும்..
அந்த நேரம் கிழடுதட்டிய ரஸ்ய பனிக்கரடியும், முதுமை கண்ட அமெரிக்கக் கழுகும் விழித்துக் கொள்ளும், ஆனால் அவைகள் பற்றிக்கொள்ள இந்த இருவரும் பதவியில் இருக்கமாட்டார்கள் காலத்தால் அவர்கள் உருவாக்கிய போலிப் பனிக்கட்டி பற்றமுடியாது உருகியிருக்கும்..
அலைகளுக்கா கி.செ.துரை 13.08.2013 செவ்வாய் மதியம்.





0 Responses to 21ம் நூற்றாண்டின் பனிப்போர் ஆரம்பமாகிவிட்டதா..?