Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய பாடகர்கள் உரிமை சங்கம் என பாடகர்கள் தங்களுக்கான புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர். இதுதொடர்பாக திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில், தமிழ் திரைப் பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஏசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் இளைய பாடர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்த சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் கூறும்போது, இந்திய அரசின் சட்டப்படி பாடகர்களுக்கான ராயல்டியை பெற்றுத்தர இச்சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, இணையதளம், தொலைபேசி ரிங்டோன் என எந்த வகையிலும் பாடல் ஒலிப்பரப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நேரடி இசைக்கச்சேரிகள் சங்கத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பின்னணி பாடகர்கள் அனைவரும், இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் ராயல்டியை பெறலாம். இந்த சங்கத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பின்னணி பாடகர்கள் உறுப்பினர் ஆகலாம். 1963ல் தொடங்கி பின்னணி பாடிய அனைத்து பாடகர்களுக்கும் ராயல்டி பெற இதில் வாய்ப்பு உள்ளது. டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் போன்றவர்களுக்கான ராயல்டியை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொள்வர். இதுவரை எந்ததெந்த ஊடகங்களில் பாடங்கள் வெளிவந்திருக்கிறது என இந்த சங்கம் ஆய்வு செய்யும் என்று தெரிவித்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது, நாங்கள் மக்களின் சந்தோஷத்திற்காகவும், சோகத்திற்காகவும் மட்டுமல்ல, எங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் பாடுகிறோம். உங்களின் சோகங்களிலும், சந்தோஷங்களிலும் எங்கள் பாடல் ஒலிக்கிறது. எங்களுக்காக இந்த சிறிய உதவியைக் கூட நீங்கள் செய்யக்கூடாதா. எங்களுக்கு சண்டை போட தெரியாது. சண்டைப்போடுவதுபோல் பாட்டுப் பாடுவோம். அவ்வளவுதான் தெரியும். அதனால் இதை எங்களின் பணிவான வேண்டுகோளாக வைக்கிறோம் என்றார்.

கே.ஜே.ஏசுதாஸ் பேசும்போது, இசையமைப்பாளர்களுக்கும், 
பாடலாசிரியர்களுக்கும் வருகிற ராயல்டியில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஒரு பாடல், பாடகர் மட்டும் பாடினால் உருவாகிவிடாது. அதில் பல இசைக்கலைஞர்கள், கோரஸ் பாடகர்களும் அடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிற்காலத்தில் ராயல்டி கிடைக்குமானால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. 50 வருடத்திற்கு பிறகுதான் பின்னணி பாடகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இன்னும் பிற்காலத்தில் நல்லது நடக்கும் என்று நம்புவோம். பல இசையமைப்பாளர்கள், நடிகை, நடிகைகள் பின்னணி பாடகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராக ஆகலாம். பெரிய பாடகர், சிறிய பாடகர் என்ற வேறுபாடு இங்கு இல்லை. எல்லா பாடகர்களும் சரிசமம்தான் என்றார்.

பி.சுசீலா பேசும்போது, இந்த நாள், பின்னணி பாடகர்களுக்கான பிறந்த நாள் என்றார்.

0 Responses to வயிற்றுப்பிழைப்பிற்காக பாடுகிறோம்! எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேட்டி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com