Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் அன்று தமிழ் மக்கள் மீது எவ்வாறான மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை இன்றைய வெலிவேரிய வன்முறைகள் தெற்கிற்கு உணர்த்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வெலிவேரியவில் குடிநீர் உரிமைகளை வலியுறுத்தி போராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு இராணுவத்துக்கு ஆணையிட்டது யார்? அத்தோடு வன்னியின் முள்ளிவாய்க்காலில் மக்கள் மீது தாக்குதல் நடத்த பணித்தது யார்? என்கிற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்த மனோ கணேசன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள நிலையில் பதிலளிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளதாக கூறியுள்ளார்.

‘அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம்’ என்கிற அமைப்பு கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி’´ என்ற தெற்கிலுள்ளவர்களின் கருத்துகளை கேட்கும் போது கவலையாக இருக்கின்றது. வன்னியில் நடத்தப்பட்ட இறுதி மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மக்கள் கொல்லப்பட்டர்கள். அதுதான், இன்றைக்கு தெற்கிலும் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. பொது மக்கள் எங்கு கொல்லப்பட்டாலும் அது நியாயமற்றது. அதற்கு சரியான விசாரணைகள் வேண்டும். இல்லாமல் பக்கச்சார்பாகவோ, தருணத்துக்கு ஏற்பவோ பேசிக்கொண்டிருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

அத்தோடு, அன்றைய வன்னி வன்முறைகள் மற்றும் இன்றைய வெலிவேரிய வன்முறைகள் தொடர்பில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு முடிவு நெருக்கிவிட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வன்னியில் அன்று என்ன நடந்தது என்பதை வெலிவேரிய வன்முறைகள் மூலம் தெற்கு உணர்ந்துள்ளது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com