Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லட்சிய திமுக தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர், கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டுள்ளார்.

 நேற்று மாலை தனது மனைவி உஷாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்த டி.ராஜேந்தர் சுமார் ஒரு மணிநேரம் அவரை சந்தித்துப் பேசினார். பின்னர் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் போது தான் திமுகவில் இணைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன?

பதில்: இன்று காலையில் திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி என்னை சந்தித்தார். தலைவர்( கருணாநிதி) என்னை பார்க்க வேண்டுமென்ற கருத்தை தெரிவித்தார். தலைவரே பார்க்க வேண்டுமென்று சொல்கிறபோது, வந்தேன். தலைவர் மனம் விட்டுப்பேசினார். நீ என் கூட இருக்க வேண்டுமென்று ஒரே ஒரு கட்டளை, ஒரேயொரு அன்பு விருப்பம் தெரிவித்தார். அவரே அறிக்கை எழுதினார். அதிலேயே எல்லா விளக்கமும் இருக்கிறது.

கேள்வி : உங்கள் லட்சிய திமுகவிற்கு இடங்கள் ஒதுக்கப்படுமா?

பதில்: தம்பி நீ என்னோடு இருக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, எதுவும் கிடையாது. இடங்கள் கொடுங்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. எத்தனை இடங்களை வேண்டுமென்றால் எடுத்துக்கொள். உன்னுடைய லட்சிய திமுக என்றால், உன் லட்சியமே திமுகவில் இருப்பது தான். நீ திமுகவில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்று தலைவரே சொன்ன பிறகு எதுவும் இல்லை. என் தலைவர் கருணாநிதி. நான் அவரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை.

கேள்வி: ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராக இருந்திருக்கிறீர்கள். இப்போது ஏதாவது பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதா?

பதில்: பதவியைப் பற்றியெல்லாம் பேச்சு கிடையாது. தலைவரின் வார்த்தையை மீறக்கூடிய சக்தி எனக்கு இல்லை. மீறக்கூடிய சக்தி இருந்திருந்தால், நான் அவருடைய இல்லத்தை தேடி வந்திருக்கமாட்டேன். வந்திருக்கிறேன். மற்றதை பற்றி எல்லாம் தலைவர் முடிவெடுப்பார். தலைவர் கருணாநிதியை என்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டிருப்பவன். வார்த்தைக்கு வார்த்தை தம்பி, தம்பி (அழுகிறார்) என்று என்னை அழைக்கக் கூடியவர். ராஜேந்தர் என்ற பெயரைக் கூட ராஜு என்று சுருக்கமாக சொல்வார். அது சுருக்கமா, நெருக்கமா என்று தெரியாது. ராஜு நீ என்னோடு இருக்கணும் என்று சொன்ன பிறகு, கட்சிக்கு வலிமை சேர்க்கணும், லட்சிய திமுக என்று தனியாக போராட வேண்டிய அவசியமில்லை, லட்சியத்தோடு இருக்கிற நீ திமுகவிலேயே இரு என்றெல்லாம் சொன்னார். நிலாவைக் காட்டி குழந்தைகளை வளர்ப்பதைப் போல என் குடும்பமே, திமுக குடும்பம். தலைவர் கருணாநிதியை காட்டி, தலைவர், தலைவர் என்று சொல்லிப் பழக்கப்பட்ட பரம்பரையிலே வந்தவன் நான்.

கேள்வி: கடந்த வாரம் கமிஷனர் அலுவலகத்தில் பார்த்த போது, உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுப்பவர்களோடு சேருவதாக சொல்லியிருந்தீர்களே?

பதில்: எனக்கு எம்.பி. இடம் அல்ல. எதைக் கேட்டாலும் எனக்கு தலைவர் கொடுப்பார். சீட் என்கிற ஸ்வீட்டுக்காக நான் வரவில்லை.

கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவீர்களா?

பதில்: அது தலைவரின் விருப்பம். அவர் முடிவு செய்வார். நிச்சயமாக முடிவு செய்து சொன்ன பிறகு நான் கூறுகிறேன் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

டி.ராஜேந்தர் இணைந்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, டி.ராஜேந்தர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து, திமுகவின் வளர்ச்சிக்கான பிரசாரப் பணியிலே தீவிரமாக ஈடுபட்டு, பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், திமுகவில் இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதுகுறித்து, நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். ராஜேந்தரும் விளக்கமளித்திருக்கிறார். இப்போது திமுக பிரசார பகுதியை மேலும் வலுமைப்படுத்தும் எண்ணத்தோடு, என் அன்பு அழைப்பினை ஏற்று, என் விருப்பபடி மீண்டும் திமுகவில். அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். திமுகவினரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதேவேளை  தே.மு.தி.க., சார்பில், எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்தும் எங்களிடம் பேசுவதற்கு, யாரும், எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

0 Responses to 'லட்சியத்தோடு இருப்பதால் திமுகவிலேயே இருக்கலாமே' : டி.ராஜேந்தருக்கு கருணாநிதி அன்புக் கட்டளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com