Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான கூனுவில் இன்று நடைபெற்று வருகிறது.
 தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி உலகத்திற்கே முன்னுதாரணமாகவும் திகழ்ந்த நெல்சன் மண்டேலா கடந்த டிசம்பர் 5ம் திகதி காலமானதை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவரது நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அவை அனைத்தும் இன்று மண்டேலாவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படுவதை தொடர்ந்து நிறைவுக்கு வரவுள்ளன.

இறுதி அஞ்சலி நிகழ்வு பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. சுமார் 4500 வெளிநாட்டு பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.  மண்டேலா ரொபன் தீவில் சிறைவாசமிருந்த போது அவருடன் நீண்டகாலம் நண்பராக இருந்த மண்டேலாவின் நெருங்கிய நண்பர் அஹ்மத் கதர்டா, மண்டேலா குறித்துப் பேசுகையில்  தனது மூத்த சகோதரரை இழந்துவிட்டதாக தெரிவிக்கிறார்.

மண்டேலாவின் குடும்பத்தினர் நேற்று இரவு முழுவதும் கண்விழித்திருந்து மண்டேலாவின் வாழ்க்கை நிகழ்வுகளை குறிக்கும் பாரம்பரிய பாடலளை பாடியவாறு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.  மண்டேலாவின் பூதவுடல் இராணுவ மரியாதையுடன் கூனுவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, அருகில் அமைக்கப்பட்ட பிரமாண்ட வெள்ளைக் கூடாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தென் ஆபிரிக்க தேசியக் கொடியினால் போர்த்தப்பட்டிருந்த மண்டேலாவின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி முன்னிலையில் வைக்கப்பட்டு அதன் முன்னாள் மண்டேலாவின் நெருங்கியவர்கள் உரை நிகழ்த்தினர்.  அங்கு நெல்சன் மண்டேலாவின் புகைப்படமொன்று, 95 மெழுகுவர்த்திகளுக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்தது.

மண்டேலாவின் குடும்ப பேச்சாளர் கங்கொம்லபா மடன்சிமா மண்டேலாவுக்கு இறுதி நேரத்தில் மருத்துவம் பார்த்து அவரது உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

மண்டேலாவின் நெருங்கிய நண்பரான கத்ரடா பேசுகையில், எனது சகோதரர், எனது குரு, எனது தலைவர் உனக்கு நான் பிரியாவிடை கொடுக்கிறேன் என உணர்ச்சிவசமாக கூறினார்.

பின்னர் மண்டேலாவின் இரு பேரப்பிள்ளைகளும் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தி தமது உரையை வாசித்தனர். இந்நிகழ்வின் போது தென் ஆபிரிக்க அதிபர் ஜாஜொப்பிற்கு இரு மருங்கிலும் மண்டேலாவின் இரு மனைவிமாருமான கிராசா மாசெல் மற்றும் வின்னி மண்டேலா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஓப்ரா அம்மையார், இளவரசர் சார்லஸ் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த தேசிய நிகழ்வின் போது மண்டேலாவின் பூதவுடல் குனு கிராமத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு அவர்களே நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர். அந்நிகழ்வு இறுதி குட்-பை என அழைக்கப்படுகிறது.

இறுதி அஞ்சலி நிகழ்வை AFP ஊடகம், யூடியூப்புடன் இணைந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதன் இணைப்பு :
மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நேரலையாக யூடியூப்பில்
மண்டேலா ஞானத்தின் நீரூற்றாக விளங்கினார். நம்பிக்கையின் தூணாக திகழ்ந்தார். மொத்தத்தில் அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக எமக்கு தொடர்ந்து காட்சியளிக்கிறார். இன்றைக்கு 95 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த சுதந்திரத்திற்கான நீண்டதூர மிகச்சிறந்த பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என தென் ஆபிரிக்க அதிபர் ஜோகப் சூமா தெரிவித்தார்.

தென் ஆபிரிக்கா முதன்முறையாக இவ்வளவு பிரமாண்டமாக ஒருவரின் இறுதி அஞ்சலி நிகழ்வை நடத்துகிறது. அதோடு ஒரு கறுப்பினத்தலைவருக்கு அவரது மக்கள் எந்தளவு கௌரவம் அளிக்கிறார்கள் என உலகமே வியக்கும் அளவு தொடர்ந்து ஒரு வாரமாக நடைபெற்று வந்த மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் சிறந்த முன்னுதாரணமாக விளங்குவதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 Responses to மண்டேலாவின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் - இறுதிப் பிரியாவிடை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com