எகிப்திய இராணுவத் தளபதி அப்டில் பட்டா எல் சிசி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது நாட்டை காப்பாற்றுவதற்காக தனது இராணுவச் சீருடையை துறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் முதல் முறையாக சுதந்திரமான தேர்தல் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டவரான முகமட் மொர்சியினது ஆட்சியை கடந்த ஜூலை மாதம் கவிழ்த்தவரான இராணுவத் தலைவர் ஜெனரல் அப்டில் பட்டா எல் சிசி தாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அதில் தான் இலகுவாக வெற்றி பெறுவேன் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் இராணுவ சீருடையுடன் உரையாற்றிய சிசி இதுவே தான் இறுதியாக இராணுவ சீருடையுடன் தோன்றும் இறுதி தருணமென்றும், நாட்டுக்காக தனது வாழ்க்கையை இராணுவ வீரனாக அர்ப்பணித்தாகவும், தற்போது நாட்டை காப்பாற்றுவதற்காக இராணுவ சீருடையை துறந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் மக்களின் ஆதரவே தனக்கு இந்த கௌரவத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த இருமுறையும் ஆட்சிகள் கவிழ்க்கபட்டதுக்கு காரணம் இராணுவமோ, அரசியல் சக்திகளோ இல்லை, மக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட அவர், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் மற்றவர்கள் போட்டியிடமுடியாது என்று இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 59 வயதான சிசியே தேர்தலில் வெற்றியீட்டுவார் என்று எதிபார்க்கப்படுகிறது. மொர்சியை ஜனாதிபதி நாற்காலியில் இருந்து அகற்றிய பின் சிசியே நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக காணப்படுகிறார். 1952 முதல் எகிப்தின் ஜனாதிபதி பதவியில் இராணுவத்தின் தலையீடு இருந்துவரும் பாராம்பரியம் ஒரு வருடத்தின் பின் இப்போது சிசியுடன் மீண்டும் தொடரவுள்ளது.
சிசி அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த செல்வாக்குடையவராகவும், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்ககூடிய பலம்மிக்க தலைவராகவும் பார்க்கப்படுகிறார். அதேவேளை, நாட்டில் சுதந்திரமான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலைவரை சதி திட்டம் மூலம் கவிழ்த்ததாக இஸ்லாமிய எதிக்கட்சியினால் குற்றம்சாட்டப்படுகிறார். முன்னர் அரசியல் ரீதியாக பலம்பொருந்தியதாக காணப்பட்ட கவிழ்க்கபட்ட ஜனாதிபதியினுடைய மொர்சியின் முஸ்லிம் சகோரத்துவ கட்சி தீவிரவாத கும்பலாக அறிவிக்கபட்டதும் குறிப்பிடத்தக்கது.
சிசியினது அறிவிப்பினை தொடர்ந்து தலைநகர் கெய்ரோவில் மொர்சியினது ஆதரவாளர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளது. அதன் போது, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து செல்லும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் மூத்த உறுப்பினரான மக்டி கர்க்கார், சிசியின் இவ்வறிப்பானது மொர்சி கவிழ்க்கபட்டது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கை என்று உணர்த்துவதாக தெரிவித்தார்.
0 Responses to எகிப்தின் இராணுவத்தளபதி சிசி இராஜினாமா; ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்!