திமுக தலைவர் கலைஞர் 02.04.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா கோவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று, தொழில் வளர்ச்சி பற்றி அவருக்கே உரிய பாணியில் பேசியிருக்கிறார். தமிழகத் தொழில் அதிபர்கள் கர்நாடகாவுக்குப் போய் விட்டார்கள் என்று நானும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவே, அந்தப் பேச்சில் கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரில் தொழில் துவங்க வருமாறு கர்நாடக முதலமைச்சர் அழைப்பு விடுத்தார் என்றும், இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் தொடர்ந்து தெரிவித்திருக்கிறாரே தவிர, நல்லவேளையாக அதை மறுக்கவில்லை.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களை யெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும். நாளேடு ஒன்றில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, "தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு" என்பதாகும். அந்தச் செய்தியில், "கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்ல உள்ளன.
தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல்தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது. தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா "கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்" என்று தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும் ஏறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்" என்றெல்லாம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநாடு நடைபெற்றதாக நானோ, ஸ்டாலினோ கூறவில்லை. நாளேடுகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் கோவையில் போய் முதலமைச்சர் ஜெயலலிதா நாங்கள் ஏதோ பொய் கூறிவிட்டதாகப் புலம்பியதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
தங்கள் மாநிலத்திலே தொழில் தொடங்க வாருங்கள் என்று கர்நாடக முதல் அமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு வந்து மாநாடு நடத்து கிறார். அதற்காக வெட்கப்பட வேண்டாமா? தமிழ்நாடு என்ன செய்கிறது? தமிழக முதலமைச்சர் என்ன செய்கிறார்? இவர்களுக்கு தொழில் வளர்ச்சியில் அக்கறை இருந்தால், பெங்களூரில் சென்று மாநாடு நடத்தி, அங்கே யுள்ள தொழில் அதிபர்களையெல்லாம் தமிழகத் திற்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு, எங்கள் மீது ஜெயலலிதா பாய்ந்து குதறுவது ஏன்? இந்த அரசுக்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நாங்களா இந்தச் செய்தியைச் சொன்னோம். இந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளை விட்டு விட்டு, அவ்வாறு பத்திரிகையிலே வந்திருக்கிறது என்று நாங்கள் கூறியது குற்றமா?
இந்த மாநாட்டிற்குப் பிறகு, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் உதவிச் செயலாளர், விஜயகுமார் என்பவர், கோவையில் நடத்தப்பட்ட மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது" என்று கூறி, அதுவும் நாளேட்டில் அப்போதே வெளி வந்தது. ஜெயலலிதா ஏன் அப்போதே அந்தச் செய்தியை மறுக்கவில்லை?
குறிப்பாக, "திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்டலத்தில், 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்" என்று செய்தி வந்ததா? இல்லையா? இதுபற்றி ஜெயலலிதா கோவையில் ஏன் வாய் திறக்கவில்லை?
மாறாக, கூட்டம் முடிந்தவுடன் தொழிலதிபர்கள், "எங்களை அழைத்தார்கள், வந்தோம், அவ்வளவு தான். எந்தச் சூழ்நிலையிலும் சாம்ராஜ் நகரில் தொழில் தொடங்க நாங்கள் தயாராக இல்லை" என்று சொன்னதாக அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ளது என்று ஜெயலலிதா சொல்லியிருக் கிறார்.
தொழில் முனைவோர் சிலர், "யாரும் இங்கிருந்து தொழிலை அங்கு இடம் மாற்ற வில்லை, தங்கள் தொழிலை அங்கு விரிவாக்கம் செய்கின்றனர். கிரானைட் பாலிஷிங் தொழிலுக்கு கர்நாடகா மாநிலம் சிறப்பான இடம். அதேபோல உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தி போன்ற தொழில்களை அங்கே விரிவாக்கம் செய்ய, நல்ல வாய்ப்பு உள்ளது" என்றெல்லாம் கூறியதாகத் தான் ஒரு நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த இதழ், "இவை கூடுதல் முதலீடுகள் என்றாலும், தமிழகத்திற்கு இவை கிடைத்திருந்தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டுச் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்பதே உண்மை. இதனால், தமிழக தொழில் முனைவோர், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்டலத் தொழில் வரலாற்றில் ஒரு குறிக்கப்பட வேண்டிய சகாப்தமாக மாறலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்" என்றெல்லாம் எழுதியிருக்கிறதே, முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஏட்டிற்கு அல்லவா விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, அந்த இதழில் இவ்வாறு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னால், நாங்கள் சொல்வது பொய்ப் பிரச்சாரமா? கோவையில் முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரித்திருக்க மாட்டார்களா?
தமிழகத்திலிருந்து இவ்வாறு தொழில் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல என்ன காரணம் என்பது பற்றியும் பலரிடம் பேட்டி கண்டு ஒரு நாளேடு 24-1-2014 அன்று அரைப் பக்க அளவிற்குச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். என்ன தலைப்பு தெரியுமா? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம், மின்வெட்டு, நில மதிப்பு - மேற்கு மாவட்ட முதலீடுகள் கர்நாடகா செல்லும் மர்மம் இதுதான்!" - இப்படியெல்லாம் நாளேடுகளில் வருகின்ற செய்திகளைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாங்கள் பொய் கூறுகிறோம் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினால் என்ன அர்த்தம்? "தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம்" என்றே தலைப்புச் செய்தி வெளியிட்டு, எத்தனை நாட்களாகிறது? தமிழக அரசு அதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா? முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மீது கோபப்படுவதற்குப் பதிலாக நாளேடுகளைப் படித்து அவருடைய ஆட்சி பற்றி மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது, பத்திரிகைகள் என்ன எழுதுகிறார்கள், உண்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். ஹெலிகாப்டரிலேயே பறந்து கொண் டிருந்தால், கீழே நடப்பது புரியாது! கீழே இறங்கி வரக் கற்றுக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,306 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்.
முதலமைச்சர் நேற்று பேசிய கூட்டத்திலேயே; 31,706 கோடி ரூபாய்க்கு 34 மாதங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதில், 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் தான் கிடைக்கப் பெற்றதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விளக்கமாக நீண்ட நேரம் பேசி, அதற்கு நான் 6-2-2014 அன்றே விளக்கமாகப் பதில் கூறிவிட்டேன். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அந்தப் பதிலைப் படிக்காத காரணத்தால், பேரவையிலே பேசியதையே கோவைக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றியும், முதலீடுகள் எவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்பது பற்றியும், நாங்கள் பொய் சொல்வதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் பேசி யிருக்கிறாரே; இந்த ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்குச் சான்றாக மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன்.
தி.மு. கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலை வாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?
மற்றுமோர் உதாரணம்! தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத் திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே அரியலூர் அரசு சிமெண்ட் தொழிற் சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியை விட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. தொழில் வளர்ச்சி என்றால் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்திருக்க வேண்டாமா? இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா?
ஏன்? அம்மையாருக்கு அவ்வப்போது மிக வேண்டியவர் சுப்பிரமணியம் சுவாமி! அவர் அம்மையாரின் ஆட்சி பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? முதலமைச்சருக்குப் படிக்க நேரம் இருந்திருக்காது. இப்போது அவர் கூறியதை நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். "தொழில் வளம், பொருளாதார வளம் எதுவுமே இல்லை. தமிழகம், கர்நாடகம் என பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இங்கிருக் கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன். தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குப் போயிருப்பதற் கான காரணம், அதை இங்கேயே தக்க வைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காததே! கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப் பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மை யான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது.
அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே" என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதாவே, பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.




0 Responses to பொய் சொல்வது நாங்களா? அல்லது நீங்களா? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி!