Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது கஸ்ரங்களுக்கு உதவி வேண்டாம். எம்மை சொந்த நிலத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலையின் சம்பூர் பகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை கிழமை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டு மணல்சேனை, பட்டிக்குடியிருப்பு பகுதிகளிலில் அமைந்துள்ள முகாங்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த போதே அவர்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “சம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் உள்ளனர். இவர்களை சனிக்கிழமை (10) நானும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் சென்று பார்வையிட்டோம். கடுமையான வெயிலில் அந்த மக்கள் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருக்க முடியாமல் பல கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.

மூதூரிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்றால், சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைக்கு வருவதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம் எங்களை எமது சொந்த இடங்களுக்கு அனுப்பினால் எங்களுடைய அரைவாசி வருத்தம் குறைந்து விடும் என அந்த மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

700 குடும்பங்களைச் சேர்ந்த 3000பேர் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்கு போக முடியாது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை இங்குள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்க வந்த நிறுவனம் ஒன்றினை இராணுவம் வழங்க அனுமதி கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது.

இதேபோல், மீன் வியாபாரியோ, உடு துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியோ இந்த முகாமுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும். 

ஜனாதிபதி நினைத்தால் அந்த மக்களின் நிலத்தை அவர்களுக்கு உடன் வழங்க முடியும். தமது சொந்த குடும்ப தேவைகளுக்காக அந்த நிலத்தை வைத்துக்கொண்டு 3000 மக்களின் வாழ்வை சீரழிக்காமல் அவர்களின் பரிதாப நிலையை கருத்திற்கொண்டு சம்பூர் மக்களின் நிலத்தை அவர்களுக்கு வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது” என்றுள்ளார்.

0 Responses to எமக்கு உதவி வேண்டாம்; சொந்த நிலங்களே வேண்டும்: சம்பூர் மக்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com