Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீன அதிபர் ஜீ ஜின்பிங் அண்மையில் இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசமுறைப் பயணம் சர்வதேச அளவில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கொழும்பிலும், மாலேயிலும் அவருக்கு வழங்கப்பட்ட குதூகல வரவேற்பும் இந்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களும் இந்து சமுத்திர பிராந்தியம் தொடர்பான பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

டில்லியிலும், நரேந்திர மோடியின் குஜராத்திலும் அரச வரவேற்பு, இந்தியாவில் சீன முதலீட்டு ஒப்பந்தங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டாலும் சீன அதிபர் இந்தியாவில் இருந்த வேளையிலும் இதற்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கூட சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதை வழமை போன்று சாதாரண விடயமாக நோக்கமுடியாது.

அத்துடன் இலங்கையில் சீன அதிபர் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் 29 ஒப்பந்தங்களில் கூடுதலானவை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அமைந்ததும் நோக்கப்பட வேண்டியது. இவற்றில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் சில இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்து சமுத்திரத்தின் கேந்திர துறைமுகங்களில் ஒன்றான கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட இருக்கும் துறைமுக நகரம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டதே சீன அதிபரின் இலங்கை விஜயத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. கொழும்பின் காலிமுத்திடலுக்கு அருகே 576 ஏக்கர் அளவிற்கான கடலை நிரப்பி இந்த தீவு நகரம் உருவாக்கப்படும் எனவும் இதற்கான முழுச் செலவை மடடுமல்ல, கட்டுமான பணிகள் அனைத்தையும் கூட சீன நிறுவனங்களே மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஆரம்ப செலவே 1.4பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரம் அமைக்கப்பட்ட பின்னர் இதன் மூன்றில் ஒரு பகுதி சீனாவுக்கே சொந்தமானதாகும் என இது தொடர்பாக இலங்கையின் சீனத்தூதரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தென் சீனக்கடலில் ஆரம்பித்து மலாக்கா நீரிணை வழியாக மொரோக்கோ வரை செல்லும் எனத்திட்டமிடப்பட்டுள்ள சீனாவின் கடல் வழிப் 'பட்டுப்பாதை' திட்டத்தில் கொழும்புத் துறைமுகமும் உள்ளடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவை அச்சுறுத்தும் வகையிலான, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவுக்காக நிரந்திர இடம் ஒன்று உருவாகிறது.

ஆசியாவின் தலைமையிடமாக பெய்ஜிங் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதும், உலக வல்லரசாக சீனா திகழ வேண்டும் என்பதும்தான் செஞ்சீனத்தின் அடிப்படைக் குறிக்கோள். சீன பொருளாதாரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்தியாவின் மேலைத் தேசங்களுடனான குறிப்பாக அமெரிக்காவுடனான அண்மைய நெருக்கம் என்பன சீனத்தின் இந்த எண்ணப் போக்கை மழுங்கடித்து விடுமோ என்கின்ற பயம் சீனாவிடம் இருக்கவே செய்யும்.

குறிப்பாக இந்தியாவின் தீவிர வலதுசாரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ளதும், குஜராத் மாநிலத்தை மேலைத்தேய முதலீடுகளுடன் வளம் கொளிக்கும் மாநிலமாக மாற்றியவர் என்று சொல்லப்படும் நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ளதும் சீனாவை இன்னமும் சிந்திக்க வைத்திருக்கும். இவற்றின் அடிப்படையிலேயே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய, இலங்கை, மாலைதீவு விஜயங்களை நோக்க வேண்டும். சீன அதிபரின் இந்திய விஜயத்தின் முன்னரும் பின்னரும் இந்திய சீன எல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள், மேலும் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

சீன அதிபரின் இந்திய விஜயத்தின் முன்னரேயே சீனத் துருப்புக்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் இந்திய பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள் எனவும் இந்திய எல்லையிலிருந்து 5 கி.மீ. உள்ளே உள்ள திபில் என்கிற கிராமம் வரை சாலை அமைக்க தமக்கு உத்தரவு வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற இந்திய இராணுவ படையணி ஒன்றிற்கும் சீன ராணுவத்திற்கும் மோதல்கள் நடைபெற்றதாகவும் அங்கே தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பகுதிகள் சிலவற்றை சீனா சொந்தம் கொண்டாடுவதும் குறிப்பாக அருணாச்சலப்பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கோருவதும் ஏற்கனவே. அக்சாய்சின் என்கின்ற பகுதியை கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதும் ஒன்றும் புதிதல்ல.

ஆனால், தற்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதும் தற்போதைய சீன இந்திய எல்லைப்புற நெருக்கடி அவர் இந்தியாவில் இருந்த வேளையிலேயே ஆரம்பித்தும், இந்தியாவை குறிப்பாக தனிப் பெரும்பான்மையடன் ஆட்சி அமைத்துள்ள புதிய மோடி அரசை எச்சரிப்பதற்கான செயற்பாடுகளோ என எண்ண வைப்பதில் நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கிறது.

ஏற்கெனவே பாகிஸ்தான், இலங்கையின் தற்போதைய மகிந்த அரசாங்கம் ஆகியவற்றுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கமான நல்லுறவு வலுப்பெறுகிறது. நேபாளம், பூட்டான், வங்கதேசம் போன்ற இந்திய ஆதரவு நாடுகளில் எல்லாம் தனது முதலீடுகளின் மூலம் சீனா நெருக்கமான நல்லுறவை வலுப்படுத்திக்கொண்டு வருகிறது.

தற்போது கொழும்பிலும், மாலேயிலும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பும் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களும், எந்த அளவுக்குத் தனது பொருளாதார பலத்தால் இலங்கையையும், மாலைதீவையும் தனது கைப்பொம்மைகளாக்க சீனா முனைகிறது என்பதனை வெட்ட வெளிச்சமாக்கிறது. மாலைதீவுக்கான விஜயத்தின் போது இந்தியாவுடனான மாலைத்தீவு விமான நிலைய நிர்மாணப் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அது சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இலங்கைத்தீவில், சீனாவின் ஆளுமை மேலும் மேலோங்குவதற்கு இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கும் இந்து மகா சமுத்திரப் பகுதிகளைத் தனது அதிகார வளையத்துக்குள் வைத்துக்கொள்ள சீனா நினைப்பதுவே காரணம் எனலாம். ஏற்கனவே அம்பாந்தோட்டையில் சீனாவின் நிதியுதவியுடன் கடல் மார்க்கத்துறைமுகம் சர்வதேச விமானநிலையம் என்பன அமைக்கப்பட்டதும் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் இறங்கு துறை ஒன்றை 500மில்லியன் டொலர் செலவில் விரிவாக்கம் செய்து கொடுத்து அந்தத் துறைமுகத்தின் ஒருபகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும் தெரிந்ததே.

இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்த காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தும், போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும், உதவியும் வழங்கியதும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும், என்பதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டதும், இந்து மகா சமுத்திரப் பகுதி அன்னிய ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் சென்றுவிடக்கூடாது என்பதால்தான்.

இந்திரா காந்திற்கு பின்னர் வந்த இந்திய ஆட்சியாளர்கள் அவரது ராஜதந்திரத்தை உணராமல் போனதன் விளைவைத் தான், இப்போது சீனா அறுவடை செய்து கொண்டிருக்கிறது!

0 Responses to இந்து சமுத்திரப் பிராந்தியமும், செஞ்சீனத்தின் ஆதிக்கமும்! - கோவை.நந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com