Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 95 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, கலாநிதி ராஜித சேனாரட்ன, வசந்த சேனாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, துமிந்த திசாநாயக்க, அர்ஜூண ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரர், இராஜதுரை உள்ளிட்ட 15 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர், அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். எதிர்க்கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியல்ல, அப்துல் ஹாலீம் ஆகியோரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா, பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஆகியோரும் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்க வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு என்பன வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என்பன ஆதரவாக வாக்களித்தன.

2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வரவு- செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்; ஐ.தே.க, த.தே.கூ எதிர்த்து வாக்களிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com