Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இது மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் முள்ளிவாய்க்காலா..?

சிறீலங்காவின் அரசியலில் மூடிசூடா மன்னாக இருந்த மகிந்தவின் காலம் முடியப்போகிறது என்ற குரல் சிங்கள அரசியல் பாதாளத்தின் வயிற்றில் இருந்து கேட்கிறது.

யாருமே எதிர்பார்க்காதளவுக்கு நிலமை கடதாசிக் கூட்டம் போல மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக சரிய ஆரம்பித்திருக்கிறது.

அன்று கிளிநொச்சியை சிங்களப்படைகள் அடைந்ததும், விடுதலைப் புலிகளின் வெற்றி கடதாசிக்கூட்டம் போல சரிய ஆரம்பித்தது போல இப்போது மகிந்தவின் சரிவு ஆரம்பித்திருக்கிறது.

இதுதான் இப்போது சிறீலங்காவில் இருந்து வரும் சுருக்கமான செய்தி..

எதிர்க்கட்சிகள் ரணிலையோ அல்லது சந்திரிகாவையோ தேர்தலில் இறக்கினால் மகிந்த இலகுவாக வெற்றி பெற்றுவிடுவார் என்பதை கண்டு பிடித்தது முதல் வெற்றி.

அடுத்து… சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக ஐ.தே.கவில் யாரோ ஒருவரை நிறுத்தினால் கூட மகிந்தவின் பிரச்சாரம் இலகுவான வெற்றியை தேடியிருக்கும்.

அதோ புலிகளுக்கு ஆதரவானவர்கள் வரப்போகிறார்கள் என்று இலகுவாக கதையைப் புரட்டிப் போட்டிருப்பார் மகிந்த.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை விலத்த ரணிலே காரணம் என்று மகிந்த குற்றம் சுமத்தியது விளையாட்டாக அல்ல, அது அவருக்கு எதிரான தேர்தல் வியூகம்.

சரத் பொன்சேகா ஏழு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென அறிவித்ததை அவரின் அடுத்த வியூகம்.. இதுவரை மகிந்த பெற்றது வெற்றிதான்.

ஆனால் மைத்திரிபால பொது வேட்பாளராக இறக்கப்பட்டபோதுதான், அவருக்கான கோடரி அவருடைய கால்களுக்கு அடியிலேயே கிடந்திருப்பது தெரிந்தது.

அதே குட்டைக்குள் இருந்து ஒரு மட்டையை பொது வேட்பாளராக பிடித்துவிட்டதே எதிரணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.

மூன்றாவது தடவை போட்டியிடலாம் என்பதை ஒன்பது நீதிபதிகளை வைத்து அங்கீகரிக்க செய்ததால் சும்மா கிடந்த சந்திரிகா அரசியலுக்கு வரக்கூடிய பாதையையும் மகிந்த போட்டுவிட்டார்.

காலம் பார்த்திருந்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அமைச்சர்கள் அற்ற நீர் குளத்து அறு நீர் பறவைகளாக ஓட்டமெடுக்க ஆரம்பித்துள்ளனர், கட்சி கடதாசிக் கூட்டம் போல சரிந்துகொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக சிங்கள சமுதாயம் திரண்டிருக்கிறது என்றே இதைப் பார்க்க வேண்டுமே அல்லாது தமிழருக்கான விடிவுடன் இதைப் பார்க்க முடியாது.

பொதுவாக சிங்கள அதிபர் ஒருவரை பதவியில் இருந்து இறக்குவதானால் ஏதாவது பிரளயம் நடக்காவிட்டால் அது நடக்காது என்பதை கடந்த கால வரலாறுகள் உணர்த்துகின்றன.

காரணம் சிறீலங்காவின் தேர்தல் களம் அதிபர் பதவியில் இருப்பவர் இலகுவாக வெற்றிபெறக்கூடிய வசதிகள் பலதைக் கொண்டுள்ளன.

சென்ற தடவை சரத் பொன்சேகா அவரது தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.

ஆகவேதான் யார் எதிர்த்தாலும் தன்னால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் மகிந்த ராஜபக்ஷ மிரட்டல்களை விட ஆரம்பித்திருக்கிறார்.

மந்திரிகளாக இருந்து ஓட்டமெடுப்போருடைய தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் இப்போதைக்கு அதை வெளியிடமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தவறு செய்வோர் தன்னோடு இருக்கலாம் எதிரணியில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதைக்கூட உணர முடியாதளவுக்கு மகிந்த தளர்ந்து போயுள்ளார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

சர்வதேச சமுதாயம் தற்போது மகிந்தவுக்கு சாதகமாக இல்லை.. உதாரணம் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை அகற்றியது.

இந்தியாவும் அவருடைய போக்குடன் இணங்குவதாக இல்லை… ஐந்து இந்திய மீனவருக்கு தூக்குதண்டனை விதித்தது இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

கருணா மூலமாக இந்திய அமைதிப்படை நடத்திய கொலைகளை அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்தது எல்லாம் இந்திய அதிருப்தியின் வெளிப்பாடுகளே.

மேலும் மகிந்தவின் ஆதரவுக்கட்சியான இந்திரா காங்கிரசின் தமிழகக் கூலியாக இருக்கும் இளங்கோவனே மகிந்தவை ஆட்சியில் இருந்து இந்தியா இறக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.

மேலும் இரண்டு தடவைகள் பதவியில் இருந்தும் ஆசை போகாது மூன்றாவது தடவையும் மகிந்த அதிபராக வர விரும்புவதை சர்வதேச சமுதாயம் அவ்வளவாக ரசிக்காது.

போர்க்குற்ற விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என்று ஐ.நா தொடக்கம் அனைவரையும் சூடேற்றியிருக்கிறார்.

இப்படி மகிந்த ராஜபக்ஷ ஏறத்தாழ பகைக்க வேண்டிய அனைவரையும் பகைத்து தனிமைப்பட்டு நிற்கிறார்.

இத்தனைக்கும் இடையில் பொது மக்கள் ஆதரவையும் நாட்டின் பொருளாதார பின்னடைவாலும், உயரும் வாழ்க்கைத் தரத்தாலும் இழந்துள்ளார்.

சந்திரிகா இரண்டு தடவை, மகிந்த ராஜபக்ஷ இரண்டு தடவையாக நான்கு ஆட்சிப்பருவங்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் இருந்துள்ளதால் அவர்கள் ஆட்சி மீதான சலிப்பும் மக்களிடையே இருக்கிறது.

முஸ்லீம்கள் மீதான தாக்குதல், பள்ளிவாசல் உடைப்புக்கள், தமிழருக்கு அதிகாரம் கொடுக்க மறுத்தல், மலையக மக்களை முன்னேற இயலாது தடுத்தல் என்று சிறுபான்மையினரை பகைக்க வேண்டியளவுக்கு பகைத்துள்ளது அரசு.

நாடு ஒரு முற்றுமுழுதான மாற்றத்திற்காக ஏங்கி நிற்கிறது, அதை ஏற்படுத்த வேண்டிய அத்தனை வாய்ப்புக்களையும் மகிந்த தவறவிட்டுவிட்டார்.

அதைவிட முக்கியம் எதிரணியின் வியூகம்.. வெற்றி பெற்றால் 100 தினங்களில் ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்பதாகும்.

எனவே ஜனாதிபதி முறைமை வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாக இது மாற்றமடையப்போகிறது.

ஜனாதபதி ஆட்சி முறைமை இருந்த 36 வருடங்களா இல்லை அது இல்லாதிருந்த பிரதமர் ஆட்சியா சிறந்தது என்ற ஒப்பீடு செய்யும் பருவம் வந்துவிட்டது.

பிரேமதாசவுக்கு பின் எல்லோரும் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்து அதைச் செய்யவில்லை, இப்போது அதைச் செய்வதே தேர்தலாகியிருக்கிறது.

இதற்கிடையில்..

ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று மகிந்த கூற வேண்டுமென அவருடைய வடக்கு மாகாண தேர்தல் பிரிவு தலைவர் வாசு தேவ நாணயக்காராவே சற்று முன் கூறியிருக்கிறார்.

அப்படி அறிவிப்பதானால் மகிந்த அதை இப்போதே செய்யலாமே…?

மீண்டும் ஓர் அதிபர் தேர்தல் வைத்து வெற்றி பெற்று அதைச் செய்ய வேண்டியதில்லை.. ஆகவே வாசுதேவவும் பல்டியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் வகுத்தும் தொகுத்தும் பார்த்துத்தான், மகிந்த ராஜபக்ஷ குடும்பம் முள்ளிவாய்க்காலுக்குள் சிக்கிவிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று எழுதியுள்ளது…

மகிந்த சிக்குப்பட்டப் போகிறாரா..?

இல்லை அவருடைய குடும்பம் இப்போது அவரது எதிரணி சிங்கள அரசியல்வாதிகளை முள்ளிவாய்க்காலில் சிக்குப்பட வைக்கப்போகிறதா என்பதுதான் அடுத்து வரப்போகும் ஆட்டமாக இருக்கப்போகிறது.

தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வென்றாலும் அங்கு பாரிய பிரச்சனை ஏற்படும், தோற்றாலும் அவருக்கு பாரிய பிரச்சனை ஏற்படும்…

புலியின் வாலைப் பிடித்தவன் அதில் ஏறினாலும் ஆபத்து விட்டாலும் ஆபத்து என்பது இப்போது மகிந்தவுக்குத்தான் பொருந்தியிருக்கிறது.

இருந்தாலும்…

தற்போது நடக்கும் சிங்கள அரசியலின் மதியூகம் சிங்கள அரசியல் வாதிகளின் வரண்ட மூளையில் உருவாகிய சிந்தனை போல தெரியவில்லை.

பின்னால் வலுவான மாயக்கரங்கள் சில இருக்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமலும் இல்லை.

எப்படியோ இம்முறை தமிழர்களிடையே மாவீரர் நாள் முன்னைய காலங்களைப் போல சூடு பிடிக்காவிட்டாலும் இப்போதைய சிங்கள அரசியலானது அதை இரண்டொரு தினங்களில் மிக விரைவாக சூடாக்கப்போவது தெரிகிறது.

அலைகள் தென்னாசியப் பார்வை 24.11.2014

0 Responses to சிறீலங்கா அரசியலில் வீசும் சூறாவளியின் இறுதி இலக்கு எது...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com