Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்நாட்டு ஆயுத மோதல்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள துரித அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.

100 நாள் திட்டத்தின் பிரகாரம் எஞ்சியுள்ள நாட்களையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அமெரிக்கா வாழ்த்துவதாகவும் ஜோன் கெரி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் குறிப்பிட்டுள்ளார்.

30 வருடகால ஆயுத மோதல் பாதிப்புகளில் இருந்து மீட்சிபெற்று இலங்கையை வளமான மற்றும் அமைதியான நாடாக மாற்றுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணம் நிறைவேற அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஜோன் கெரி உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கியம், கலாசாரம், இனப் பிரிவுகள் மற்றும் மதங்களுக்கு இடையில் பன்முகத்தன்மையை நிலைபெறச் செய்வதே புதிய இலங்கையின் மைல் கல்லாகும் என இந்த சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜோன் கெரியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் பேணப்பட்டு வருகின்ற வலுவான தொடர்புகளை மேலும் விஸ்தரிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவுடனான உறவில் ஓரளவு விரிசல் ஏற்பட்டிருந்த போதிலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மீண்டும் திறன்பட முன்னெடுப்பதற்காக அடுத்து வரும் சில மாதங்களில் நெருக்கமாக செயற்படுவதற்கு எண்ணியுள்ளதாகவும் இராஜாங்க செயலாளரிடம் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய நிர்வாகத்திற்கு அமெரிக்காவுடனான தொடர்புகள் ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது என்பதுடன், சிறந்தவொரு வாய்ப்பாக அமையும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to இலங்கையின் மீள் எழுச்சிக்கு அமெரிக்கா உதவும்; மங்களவுடனான சந்திப்பில் ஜோன் கெரி தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com