Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. ஆரம்ப அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். அவரின் உரை ஜெனீவா நேரப்படி இன்று பிற்பகல் 01.20 மணிக்கு இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு, மனித உரிமைப் பேரவை அமர்விற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கையை செப்டெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கவென ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப அமர்வில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றவுள்ள உரை முக்கியத்துவம் பெறுகின்றது.

மங்கள சமரவீர தனது உரையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கையை பிற்போட்டமைக்காக நன்றி தெரிவிப்பதுடன், உள்ளக பொறிமுறையை விரைவில் நிறுவுவதாகவும் உறுதி வழங்குவாரென வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து நேரடியாக ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். அவர் தலைமையில் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட கூட்டத் தொடரில் பங்குபற்றும் அமைச்சர் மங்கள சமரவீர, இதில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா வருகை தந்திருக்கும் ஏனைய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் சந்தித்து இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லாட்சி மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து பேச்சு நடத்திய அதேநேரம் இலங்கை குறித்து ஜெனீவா அறிக்கையை அடுத்த அமர்விற்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் மார்ச் 27 ஆம் திகதி வரையில் நடைபெறும். உயர்மட்ட அமர்வில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர் சேம் குடேசா, மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோசிம் ருகர் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்; மங்கள சமரவீர உரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com