Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நாட்டில் வாழும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் இதய சுத்தியோடு முயற்சிக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டதாகவும், தெற்கில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட பொது பல சேனாவிற்கு அரசாங்க உயர் மட்ட தரப்பினரிடமிருந்து அனுசரணை கிடைத்ததாகவும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சனிக்கிழமை மாலை அவரது இல்லத்தில் வைத்து கலந்துரையாடினார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில் கடந்த அரசாங்கத்தின் போக்கு மற்றும் புதிய அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கை ஆகியன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் தவறியமைக்கான காரணம் குறித்தும் பெல்ட்மன் இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்விகளை எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ரவூப் ஹக்கீம், “எங்களது கட்சி பிளவுபடாது பாதுகாப்பதற்காகவும், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் குறைந்த பட்ச தேவைகளையாவது நிறைவேற்றுவதற்காகவும் விருப்பக் குறைவோடாவது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது.

யுத்தத்தை வெற்றிக் கொண்டு விட்டதாக இறுமாப்பில் இருந்த முனைய ஜனாதிபதி, இனங்களுக்கிடையிலான துருவப்படுத் தலைக் குறைப்பதற்கும், விரிசலை நீக்குவதற்கும் என வெறும் கண் துடைப்பிற்காக சில காரியங்களைச் செய்தாரே தவிர உண்மையான இதய சுத்தியோடு எந்த விதமான பயனுள்ள முன்னெடுப்புகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த, இந் நாட்டு முஸ்லிம்களின் அதிக பட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்லாது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட அதில் இடம்பெறச் செய்யப்படவில்லை. வேண்டுமென்றே நாம் முன்னைய அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டோம்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக தெற்கில் இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பொது பல சேனா மற்றும் பேரினவாதச் சக்திகளுக்கு அப்போதைய அரசாங்க உயர்மட்டத்தினரின் அனுசரணை கிடைத்தது. அவர்கள் போஷித்து வளர்க்கப்பட்டனர். இனவாதம் மட்டு மல்லாது, ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்த அப்போதைய அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதற்கு சிறுபான்மையினர் உட்பட நாட்டு மக்க ளில் பெரும்பான்மை யானோர் முன் வந்தனர்.

மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் பாராளுமன்ற சமநிலைப் பேணுவதில் நிலவும் கருத்து வேறுபாடுகள், முந்திய ஜனாதிபதியின் விசுவாசிகளின் செயற்பாடுகள் என்பன சவாலாக இருந்த போதிலும், நூறு நாள் திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலொற்றை நடாத்தி தேசிய அரசாங்கமொன்றை நிறுவி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மிகவும் முனைப்பாகவுள்ளனர். நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க முன்வந்த முக்கிய சட்டங்களை முன்னைய ஆட்சி தடுத்து நிறுத்தியது.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்திற்கான இதய சுத்தியோடு மஹிந்த அரசு செயற்படவில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் ஹக்கீம் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com