Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்துள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தன்னுடைய ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த வாரம் முன்வைக்கவுள்ளது.

அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை இரத்துச் செய்தல், 17வது திருத்தத்தில் திருத்தம் செய்தல், நல்லாட்சி தொடர்பான சரத்தை இணைத்தல் என்பவற்றுக்கு உடன்படக் கூடியதாக உள்ள போதும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்திலுள்ள சில சரத்துகளை அகற்றுவது தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரு நபரையோ கட்சியை இலக்குவைத்து அரசியலமைப்பை திருத்துவதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசியலமைப்பினூடாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் மாகாண சபைகள் தொடர்பில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை கலைக்க முடியும். வரதராஜப் பெருமாள் தனியாட்சி அறிவித்த போது ஜே. ஆர். ஜெயவர்தன வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்தார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே அரசியலமைப்பு திருத்தத்துடன் நாட்டின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு என்பன குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமரின் அதிகாரங்களை அதிகரிப்பதினூடாக நாட்டில் ஸ்தீரமற்ற நிலை ஏற்பட இடமளிக்க முடியாது. மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராவார் என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? தனிநபர் ஒருவருக்காக அரசியலமைப்பை திருத்துவதானால் அதற்கு இடமளிக்க முடியாது.

நிறைவேற்று அதிகாரம் தேர்தல் முறையுடன் தொடர்புள்ளது. அதனாலே இரு திருத்தங்களையும் நன்றாகவே செய்ய வேண்டும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களில் மூன்றில் மாற்றம் செய்தால், 36 அம்சங்களில் அதனால் பாதிப்பு ஏற்படும். அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் யோசனைகள் அடங்கிய நகலொன்றை எமக்கு வழங்கியுள்ளது. அதிலுள்ள விடயங்கள் குறித்து சு.க. மத்திய குழு ஆராய்ந்தது.

இது தொடர்பாக மத்திய குழு உறுப்பினர்களின் யோசனைகளை முன்வைக்க ஒருவார காலம் வழங்கப்பட்டது. அந்த யோசனைகளையும் கவனித்து இந்த வார இறுதிக்குள் எமது திருத்தங்களடங்கிய அறிக்கை தயாரிக்கப்படும் சில தினங்களில் எமது திருத்தம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் அடுத்தவாரம்: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com