Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெடுங்காலமாக சிறைவாசத்தை அனுபவித்துவரும் நாம் பட்டறிவுகளைப் பாடமாகக்கொண்டு இனிவரும் நாட்களை இனிய நாட்களாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனவே, எம்மையும் இந்த நாட்டுப் பிரஜைகளாகக் கருதி, விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.

தமது விடுதலை தொடர்பில் அக்கறை கொள்ளுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தை தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த மூன்றரை தசாப்தகால உள்நாட்டுப் போர்ச்சூழலால் அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக நாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோம். சூழ்நிலைக் கைதிகளான எம்மில் இளைஞர்கள், யுவதிகள், வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் அடங்கலாக 320 பேர் வரை இலங்கையிலுள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோம்.

குற்றமிழைத்த ஒவ்வொருவருக்கும் வழங்கக்கூடிய தண்டனைக்காலத்திற்கும் மேலதிகமாக நாம் தண்டனையை அனுபவித்து வருகிறோம். எமது வாழ்க்கையின் அரைவாசிக்கும் அதிகமான காலத்தை சிறைக்கூண்டுக்குள் தொலைத்திருக்கும் நிலையில், எமது குடும்பத்தவர்களும் இன்னோரன்ன துன்பங்களைச் சுமந்துவருகின்றனர். எம்மை விடுவிப்பதற்காக அவர்கள் நாளும் பொழுதும் அலைந்து பணத்தைச் செலவிட்டு வறுமைக்கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்களாக மாறிவிட்டனர்.

சாதாரண மனித வாழ்வின் இயல்புத்தன்மையை இழந்துவிடும் நிலையில் நான்கு சுவர் சூழ்ந்த கூண்டுக்குள் நாம் முடக்கப்பட்டுள்ளோம். எனவே நாட்டின் தலைமகனாகிய தங்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எமக்கு பொது மன்னிப்பு வழங்கி, சீரழிந்துகொண்டிருக்கும் ஒருதொகுதி மக்கள் சமூகத்தைத் ததூக்கி நிறுத்துமாறு நாம் கருணைக்கரம் நீட்டுகிறோம். முன்னாள் போராளிகளைச் சமூகத்துடன் இணைத்து அவர்களுக்கும் வாழ சந்தர்ப்பம் வழங்கியது போன்று எமக்கும் ஒரு சந்தரப்பத்தை வழங்குமாறு கோருகிறோம்.

இன்று முழு நாடும் அபிவிருத்தியையும் சமாதானத்தையும் சுகவாழ்வையும் அனுபவித்துவரும் நிலையில், எமது மனங்கள் விரக்தியையும், ஏமாற்றத்தையுமே உணர்கின்றன. எமது விடுதலையின் நியாயத்தை சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் ஜனாதிபதியாகிய தாங்கள் நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.” என்றுள்ளது.

0 Responses to எமது விடுதலைக்கு உதவுங்கள்: ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com