Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை அதிருப்தியளிக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை வருகை தந்த ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜெப்ரி பெல்ட்மன் வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்தும், வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் குறித்தும் ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டார் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை குறித்து தமிழ் மக்களினதும், வடக்கு மாகாண சபையினதும் அதிருப்தியையும் முதலமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சர் வெளியிட்ட அதிருப்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தவை வருமாறு: "இலங்கை அரசாங்கம் அமைந்து இரு மாதங்கள் கூட இன்னமும் பூர்த்தியாகவில்லை. இந்நிலையில் உடனடியாக தீர்வை காண வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல். எனவேதான் 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 29 ஆவது அமர்வு செப்ரெம்பர் மாதம் நடக்கும் போது கட்டாயமாக விசாரணை குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டே தீரும்.” என்றுள்ளார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவான பின்னர் வடக்கு மாகாண சபை 'இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியதற்கான காரணத்தை முதலமைச்சரிடம் ஜெப்ரி பெல்ட்மன் கேட்டறிந்தார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "இந்த அரசாங்கம் அமைவதற்கு நாங்களும் உதவியிருக்கிறோம். ஆனால் ஆட்சியேற்றதும் தமிழ் மக்கள் கைவிடப்பட்டனர். இராணுவத்தை அகற்றுகிறோம், மக்களை மீளக் குடியமர்த்துகின்றோம் எனக் கூறிய இந்த அரசு எமது மக்களை ஏமாற்றி விட்டது. எமது மக்களின் மன உளைச்சலை வெளிப்படுத்தவே 'இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என்றுள்ளார்.

இந்த சந்திப்பின் முடிவில் இனப்படுகொலைத் தீர்மானம் குறித்த சில ஆவணங்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் கையளித்தார். இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

0 Responses to விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு அதிருப்தியளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com