Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை சம்பூரில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி விடுத்திருந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

இதற்கமைய சம்பூர் காணியில் மீள்குடியேற்றுவதற்கான ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், பிரியந்த ஜயவர்தன, உப்பாலி அபயரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரித்தது. சம்பூர் மக்கள் சார்பில் சட்டத்தரணியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்காக வழங்கப்பட்டிருந்த 818 ஏக்கர் சம்பூர் காணியை மீட்டு அதில் இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதாக அமைச்சரவை கடந்த பெப்ரவரி மாதம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, மீட்கப்பட்ட காணியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தொடருமாறு மார்ச் 07 ஆம் திகதியன்று ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிலிருந்து குறித்த காணியை சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்த தனியார் கம்பனி, ஜனாதிபதி வர்த்தமானி பிரசுரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி வர்த்தமானி பிரசாரத்திற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடந்த அரசாங்கம் சம்பூர் காணியை மீளப்பெற்று மீள்குடியேற்றத்தை செய்வதாக உச்ச நீதிமன்றத்திற்கு 2007 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதியையும், பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ 2012 இல் பாராளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியினையும் சட்டத்தரணி சுமந்திரன் உச்சநீதிமன்றத்திற்கு முன்வைத்திருந்தார். விசாரணைகளின் முடிவில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடையுத் தரவினை விலக்கிக்கொண்டது.

0 Responses to சம்பூர் காணி மீள் கையளிப்பு மீதான இடைக்கால தடையுத்தரவு நீக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com