Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதனூடாக நல்லாட்சிக்கான மக்களின் பிரதிபலிப்புக்களை அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, "நல்லாட்சி அரசின் செயற்பாடுகளின் விளைவுகளை மக்கள் தற்போது உணர்ந்து கொண்டிருக்கின்றனர். நல்லாட்சி என்ற போர்வையில் மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு முடிவுகட்டும் காலம் வெகு விரைவில் வரும். ஆகவே, பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு இந்த அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

தேர்தலில் நல்லாட்சியின் பிரதிபலிப்புகளை அரசு உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அமெரிக்காவின் தலையீட்டால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனை நாங்கள் ஆரம்பத்திலே குறிப்பிடும்போது இனவாதம் பேசுவதாகக் குறிப்பிட்டனர். எனினும், தற்போது அந்நிலை உருவாகி வருவதை அனைவரும் உணர்கின்றனர்.

30 வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்குப் பாரிய சேவையொன்றை ஆற்றியுள்ளமையினாலேயே தற்போதும் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஜனாதிபதியாக அல்லாது ஒரு தனி மனிதனாக வைபவங்களில் கலந்துகொள்ளும்போதும் மக்கள் வெள்ளம் திரண்டு வருகின்றமை அதற்கு அங்கீகாரமாகும்.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவந்த ஒரே காரணத்துக்காக எனக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைக்க ஜெனிவாவில் பேச்சு நடத்திவருகின்றனர். அது மாத்திரமல்லாது, அமெரிக்காவின் அழுத்தங்களினால் உள்நாட்டு விசாரணை முன்னெடுக்கவும் தற்போதுள்ள அரசியல் தலைமைகள் இணக்கப்பாட்டில் உள்ளன. அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டு இந்த அரசுக்கு வக்காளத்து வாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், மக்களை எந்நாளும் ஏமாற்றமுடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.

0 Responses to பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com