Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளினால் மீட்கப்பட்ட 150 கிலோக்கிராம் தங்கத்தில், 40 கிலோக்கிராம் தங்கம் எங்கே போனது?, என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதி மோதல் காலத்தில் புலிகளிடமிருந்து எவ்வளவு தங்கம் மீட்கப்பட்டது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதிலை நேற்றைய (புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வில் பிரதமர் வழங்கினார்.

பிரதமர் தனது பதிலில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், அந்த வங்கிகளில் மூழ்கிப் போயிருந்த நகைகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் என்று 150 கிலோக்கிராம் நிறையுடைய தங்கம் மீட்கப்பட்டதாக இராணுவம் அறிக்கையிட்டுள்ளது.

அந்தத் தங்கத்தில், வளையல்கள், மாலைகள் மற்றும் மோதிரங்கள், ஏன் தாலிகளும் அடங்குகின்றன. 150 கிலோக்கிராம் தங்கத்தில் 32 கிலோக்கிராம் தங்கம், மத்திய வங்கியில் இருக்கின்றது. இவை 2010 செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் 2012 வரையிலும் 28 தடவைகள் கையளிக்கப்பட்டன. இவற்றை ஆபரணங்கள் மற்றும் இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை மதிப்பீடு செய்தது. அதன் பிரகாரம், அவற்றின் பெறுமதி 131 மில்லியன் ரூபாயாகும்.

தங்கத்தை 2,292 பேர் பெற்றுக்கொண்டதாக ஊடகங்கள் அறிக்கையிட்டன. எனினும், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத் தரவுகளில் 1,960 பேர் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 150 கிலோக்கிராமில் 80 கிலோக்கிராம், தங்கத்துக்குரிய உரிமையாளர்கள் இனங்காணப்படாத நிலையில் அந்த 80 கிலோக்கிராம் இராணுவத்திடம் இருக்கின்றது. அவை இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இந்த அவையில், வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இறுதி மோதல்களின் போது கட்டளையிட்ட அதிகாரியான சரத் பொன்சேகா அமைச்சர் இருக்கின்றார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் (மஹிந்த ராஜபக்ஷ) இருக்கின்றார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிலையியற் குழுவை நிறுவி உடனடியாக தீர்வு காண வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, “இராணுவத்திடம் இருப்பது அப்பிரதேச மக்களின் தங்கமாகும். அதனை எப்படிக் கொடுக்கப் போகின்றீர்கள், பிரதமரின் பதிலின் பிரகாரம் 150 கிலோக்கிராம் தங்கம் மீட்கப்பட்டது. அதில் 32 கிலோக்கிராம் தங்கம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 80 கிலோக்கிராம் இராணுவத்திடம் உள்ளது. அப்படியாயின் 40 கிலோக்கிராமுக்கு என்ன நடந்தது?

தங்கப் புதையல் கிடைக்கவில்லை. இது மக்களின் தங்கம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கம். அதற்கான பற்றுச்சீட்டு, டெக் இருக்கின்றன. ஆகையால் உரிமையாளர்களை இனங்காண்பது கடினமான விடயமல்ல. மக்களின் தங்கத்தை ஆறு வருடங்கள் தடுத்து வைத்திருப்பது உசிதமானது அல்ல.” என்றார்.

0 Responses to வடக்கில் மீட்கப்பட்ட தங்கத்தில், 40 கிலோக்கிராம் தங்கம் எங்கே போனது?; அநுரகுமார திஸாநாயக்க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com