Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் என்பவற்றை நிறைவேற்றுவதற்கான சுய பயணத்தை நோக்கி இலங்கை செல்வது மதிக்கப்படவேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31வது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

அரசியலமைப்பை மறுசீரமைத்தல், சுயாதீன நிறுவனங்களை புதுப்பித்தல் மற்றும் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகள் இலங்கையினால் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சையிட் அல் ஹூசைன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பலமான சமிக்ஜைகள் தென்படுகின்றன. தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுகின்றமை, இராணுவ வசமிருந்த காணிகளை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், காணாமற்போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டுக் கூறலாம். இருந்தாலும், இந்நடவடிக்கைகள் வேகமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

விரிவான இடைநிலை நீதியை நிலைநாட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேசிய அரசியலமைப்பை தயாரிக்கவிருக்கும் தருணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமான மாதங்களாக அமையும். கடுமையான மேற்பார்வை மற்றும் அச்சுறுத்தல் எதுவும் அற்றசூழ்நிலையில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்மூலமே பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படும். வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவை: சையிட் அல் ஹூசைன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com