Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வேலைத்திட்டத்தினை புரிந்துகொள்ளுதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல் என்பன தெற்கு மக்களின் கடமையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

“முன்னைய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கோடிக்கணக்கான பொருட்களை வாரி வழங்கியபோதும் அன்று அம்மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண முடியவில்லை. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித பொருட்களையும் பகிர்ந்தளிக்காத தான் இன்று வடக்கிற்கு செல்லும்போது மிக மகிழ்ச்சியுடனும், அன்புடனும் அவர்கள் வரவேற்கின்றனர். அதற்கு காரணம் யாதெனில் இதயத் துடிப்பினை இனங்கண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற “சாகித்திய கலாரச விந்தனய” நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கம் தொடர்பான செய்தி இன்று வடக்கினை விடவும் தெற்கிற்கு கொண்டுசெல்லும் தேவைப்பாடு நிலவுகின்றது. வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வேலைத்திட்டத்தினை புரிந்துகொள்ளுதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தல் தெற்கு மக்களின் கடமையாகும்.

இந்நாட்டின் நல்லிணக்க கொள்கையை பலப்படுத்துவதற்காக இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரால் இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அவர்கள், இதற்காக ஒன்றுபடு வேண்டும். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் மேற்கொள்ள முடியாது. மதத் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், புத்திஜீவிகள் அனைவரும் தேசத்தின் எதிர்காலத்திற்காக இக்கடமையை பொறுப்பேற்க வேண்டும்.

இந்நாட்டை மகிழ்ச்சியாக வாழும் மக்களைக்கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்களை யதார்த்தமாக்குதல் வேண்டும். இவ்வார்த்தைகளை இன்று சிலர் கொச்சைப்படுத்தி அவமரியாதை செய்தாலும் நாட்டின் எதிர்காலமானது நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது தெற்கு மக்களின் கடமையாகும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com