Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருக்கு காணி வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிகளைப் படையினருக்காக கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்துக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த எண்ணிக்கையின் பிரகாரம் வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயம் நீங்கலாக, 3 இடங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்தோடு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 21 இடங்களும், வேலணை மற்றும் சாவகச்சேரி ஆகிய இரு பிரதேச செயலக எல்லைப் பரப்புகளுக்குள் தலா 16 இடங்களும், ஊர்காவற்றுறை, சங்கானை, கோப்பாய் ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா 8 இடங்களும் கோரப்பட்டுள்ளன.

சண்டிலிப்பாயில் 9 இடங்களிலும் நெடுந்தீவு, நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 6 இடங்களிலும், காரைநகரில் 5 இடங்களிலும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 3 இடங்களும், கரவெட்டி மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 2 இடங்களும் கோரப்பட்டுள்ளன.

மேலும், குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிகக் குறைந்த இடமாக உடுவிலில் ஓர் இடம் மட்டும் கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பல ஆயிரம் ஏக்கருடன் 118 இடங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்வாறு கோரப்பட்டுள்ள இடங்களில் பல மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அளவீடு செய்ய முற்பட்டவேளையில், மக்களும் அரசியல்வாதிகளும் தலையிட்டு தடுப்பில் ஈடுபட்டனர்.

ஆயினும், நல்லாட்சி அரசின் ஆட்சியில் இந்த விடயத்திற்கு தீர்வு கிட்டும் என நம்பியிருந்த மக்களின் மனதில் மீண்டும் அச்சம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் பங்கேற்கவில்லை. உடல் நலக் குறைவினால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

நேற்றைய சந்திப்பில் யாழ். மாவட்டம் தவிர, வடக்கிலுள்ள ஏனைய நான்கு மாவட்டங்களிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்) இராணுவத்தினருக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர், முப்படைத்தளபதிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களும் கலந்துகொண்டனர்.

0 Responses to யாழில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக 118 இடங்களை இராணுவம் கோருகின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com