Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்கள் 1200 பேர் இலங்கையில் தங்களுடைய சிறுநீரகங்களை தானம் செய்துள்ளதாகவும், இவை சட்டரீதியாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சிறுநீரகங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள இந்தியர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் நன்கு பயிற்றப்பட்ட வைத்தியர்களாலேயே சிறுநீரக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரகங்களைத் தானம் செய்த எட்டு இந்தியர்கள் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டார்.

வெள்ளவத்தைப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட எட்டு இந்தியர்களில் ஆறு பேர் கடந்த மூன்று வருடங்களில் சத்திரசிகிச்சை மூலம் தமது சிறுநீரகங்களை தானம் செய்துவிட்டு உரிய வீசா அனுமதி இன்றி நாட்டில் தங்கியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஆஜராகியிருந்தார்.

2013 முதல் 2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், இலங்கையின் சட்ட நடைமுறைக்கு உட்பட்ட வகையிலேயே இந்தியர்களிடமிருந்து சிறுநீரகங்களை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு மூன்றாவது தரப்பினருக்கு விற்கப்பட்டதா என்ற சந்தேகத்தில் தாம் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நெவில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் இலங்கையர்கள் மற்றும் இந்தியர்களை உள்ளடக்கிய சிறுநீரக மோசடியில் ஈடுபட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட எட்டு இந்தியர்களையும், எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரம், சந்தேகநபர்கள் எட்டுப்பேரையும் மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்குமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. கைதுசெய்யப்பட்ட எட்டு இந்தியர்களில் ஆறு பேர் தலா 500,000 ரூபா படி தமது சிறுநீரகங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னதாக நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியைப் பெற்று சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் அறிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 286 ஆவணங்களும், 26 இறப்பர் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டு அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இன்டர்போல் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பவிருப்பதாகவும் குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

விசா அனுமதி இன்றி தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறுவதாகக் கூறப்படும் சிறுநீரக மோசடி குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் உயர்மட்டக் குழுவொன்றை அமைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடந்த 3 ஆண்டுகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் இலங்கையில் அகற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com