Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விபரத்தை எதிர்வரும் 28 திகதிக்கு முன்னர் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு- கிழக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான விவரங்களின் தொகுப்பை அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது ஜனாதிபதி தனது அதிருப்தியை நேரில் வெளிப்படுத்தியுள்ளார்.

நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை 6 மாத காலத்தினுள் மீளக்குடியமர்த்துவேன் என்று வாக்குறுதி வழங்கிவிட்டேன். அதனை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்துச் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் 8 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியமர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட செயலணியின் மூன்றாவது கூட்டத் தொடரே நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது, ஏற்கனவே நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில் சொல்லப்பட்ட விடயங்களை ஜனாதிபதி மீளாய்வு செய்தார்.

இதன்போது, ஒவ்வொரு மாவட்ட அரச அதிபர்களும் தமது மாவட்டப் புள்ளி விவரங்களைச் சமர்ப்பித்தனர். பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் எவ்வளவு, அதில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு தேவைக்கு வைத்திருக்கும் காணிகள் எவ்வளவு? அதன் காரணமாக எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்து எங்கிருக்கின்றனர்? நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் காணிகள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன? உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்தனர்.

இதன் பின்னர் மாகாண ரீதியாக தொகுப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இந்த விவரங்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த கூட்டங்களின்போது, இந்த விவரங்களைத் தயார்படுத்துமாறு கூறியதை அதிகாரிகள் செயற்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அதிகாரிகளைக் கடிந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விபரத்தினை ஒப்படைக்க மைத்திரிபால வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com