Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரின் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், இவர்களின் ஈழக்கனவை அழிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டது.

எமது படைகளிடம் போரில், தோல்வி கண்ட போதும், போர்க்களத்தில் இருந்த புலிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன்.

புலிகளின் தனி ஈழத்துக்கான கொள்கையை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாது.

தனிநாட்டுக்கான கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய வேண்டுமாயின், இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

புலிகளின் தனிநாட்டுக் கொள்கையைத் தோற்கடிப்பதில் தோல்வி கண்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது ஒருவகையில் போரில் வெற்றி பெற்ற அரசாங்கத்தின், தோல்வியை ஒப்புக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலமாகவும் கருதலாம்.

ஏற்கனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள், போரில் வெற்றியைப் பெற்ற போதிலும், இன்னமும் இலங்கை அமைதியை வெற்றி கொள்ளவில்லை என்று கூறியிருந்தனர்.

அமைதியை வெற்றி கொள்ளுதல் என்பது ஒரு மிகப் பெரிய இலக்கு என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர்.

இதற்கு ஒருபடி மேலே சென்றுதான், புலிகளின் ஈழக் கனவை தோற்கடிப்பதில் தோல்வி கண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

ஈழக்கனவு என்ற விடயத்தில், ஜனாதிபதியின் மதிப்பீடுகள் சில தவறானவை. ஈழக்கனவு என்பது புலிகளின் கொள்கை, கோட்பாடு என்ற கருத்து தவறானது.

ஏனென்றால் புலிகளுக்கு முன்னரே, தனிநாட்டுக் கனவு என்பது தமிழர்களிடம் தோன்றிவிட்டது. ஆனால் அதனை பெருமளவில் முன்நோக்கி நகர்த்திச் சென்று சர்வதேச அளவில், மிகப்பெரிய போராட்டமாக மாற்றியவர்கள்தான் விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகளின் அழிவுடன் ஈழக்கனவு செத்துப் போய்விடும் என்ற ஆட்சியாளர்களின் கனவு பொய்த்துப் போனதற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது சலித்துக் கொண்டு இதனைக் கூறியிருப்பதற்கும் இதுதான் காரணம்.

சிங்கள அரசியல் தலைமைகள் மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்திடமும் ஒரு தவறான புரிதல் நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது,

அதாவது, தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை, விடுதலைப் புலிகள்தான் நாட்டைப் பிரிக்க முனைகிறார்கள் என்பதே அந்தத் தப்புக்கணக்கு. அதன் நீட்சியாகத்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்தவுடன், ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவும், புலிகளுடன் அவர்களின் ஈழக்கனவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தனர் என்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

ஆனாலும், அவர்களே பின்னர், புலிகளின் ஈழக்கனவு உயிருடன் இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முயற்சிகள் நடப்பதாகவும், கூறி அரசியல் நடத்தவும் தவறவில்லை.

புலிகளுக்குப் பின்னரும், ஈழக்கனவு அழிந்து போகாமல் நீட்சி பெற்றிருப்பதற்குக் காரணம், தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாதமை மட்டும்தான்.

விடுதலைப் புலிகளுக்கு முன்னர், ஈழக் கோரிக்கை ஆரம்பித்ததற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, இன்னமும் அதே காரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும், தமிழர்களிடத்தில் ஈழக்கனவு சாகாவரம் பெற்றிருக்கிறது. இதிலிருந்து கூட அரசாங்கம் இதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான், தோன்றுகிறது.

ஏனென்றால், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் மூலமே ஈழக்கனவை வலுவிழக்கச் செய்ய முடியும் என்ற கருத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கிறார்.

அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் அரசாங்கம் இன்னமும் சரியான திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கவில்லை என்பதையே அவரது இந்தக் கருத்து சான்றுபடுத்துகிறது.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் என்று வேறொரு திசையின் வழியாகவே இந்தப் பிரச்சினையை அரசாங்கம் அணுக முனைகிறது.

இதன் மூலம் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை விட்டு விலகிச் செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை தோன்றியதற்கு, ஈழக் கோரிக்கை வலுப் பெற்றதற்கு, ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றதற்கு எல்லாம் தனித்தனியான காரணங்கள் கிடையாது. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதே ஒரே காரணம்.

ஒரு காலத்தில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆட்சி செய்த இனம் என்பதை சிங்களத் தலைவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்குப் பின்னரே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். காலப்போக்கில், தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்ட போது தான், உரிமைப் போராட்டங்கள் தீவிரம் பெற்றன.

அண்மையில் பாலமுனையில் நடந்த முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “ஒருகால கட்டத்தில் நாம் தனித் தமிழீழம் கேட்டோம்.

அப்படிக் கேட்பதற்கு உரிமை இருந்தது. நாங்கள் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது, தமிழீழத்தைக் கைவிட்டு வி்ட்டோம், எமக்கான அதிகாரப்பகிர்வை- சமமான உரிமைகளைத் தாருங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், அரசாங்கமோ, அதிகாரப்பகிர்வு, சம உரிமைகள் என்ற விடயத்துக்கு வெளியால் ஒரு தீர்வை எட்டவே முயற்சிக்கிறது.

இன நல்லிணக்கத்தின் மூலம் மட்டுமே, இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகிறார் போலும்.

இன நல்லிணக்கம், என்பது நிலையான அமைதிக்கு அவசியமானதே. அத்தகைய நல்லிணக்கத்துக்கு முதன்மையானது, அதிகாரப் பகிர்வும், தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும்தான்.

அதிகாரப்பகிர்வு, தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது பற்றிப் பேசினால், தெற்கின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்பதால், அரசாங்கம், அதுபற்றிப் பேசாமல், நல்லிணக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தைப் போலவே, ஈழக்கனவை இல்லாமல் செய்வதற்கே இப்போதைய அரசாங்கமும் முயற்சிக்கிறது.

இந்த விவகாரத்தை அணுகுகின்ற விடயத்தில்-முன்னைய அரசாங்கத்துக்கும் இப்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் எதையும் காண முடியவில்லை.

முன்னைய அரசாங்கங்கள், ஈழக்கனவை போரின் மூலம் அழிக்க முனைந்தன. இப்போதைய அரசாங்கம், நல்லிணக்கம் மூலம் அழிக்க முனைகிறது அவ்வளவு தான்.

புலிகள் இருந்த போது ஈழக்கனவு கூடுதல் வலுவானதாகவே இருந்தாலும், இரா. சம்பந்தன் இப்போது அதனைக் கைவிட்டு விட்டதாகவே கூறியிருந்தாலும், அதன் வீச்சுக் குறைந்து விட்டதாகக் கருத முடியாது. அது ஒரு நீறுபூத்த நெருப்புத்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையில் தனிநாட்டுக் கனவை வலுவற்றதாக்குவதற்காக என்று நினைத்துக் கொண்டு இந்த அரசாங்கமும், சாத்தியமற்ற வழியினால் தான், பயணம் செய்ய முனைகிறது.

சிங்கள அரசியல் தலைமைகள், நிலைமையைப் புரிந்து கொள்ளாததால், தான் இவ்வாறு செயற்படுகின்றன என்ற கருத முடியாதுள்ளது.

தூங்குவது போல நடிப்பவனை தட்டியெழுப்ப முடியாது என்பது போலத்தான், அரசாங்கமும், ஈழக்கனவின் தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளாமல் இப்படி நடந்து கொள்கிறது என்று கருத முடியவில்லை.

சத்ரியன்.

0 Responses to ஈழக்கனவுக்கு எதிரான இரண்டாவது யுத்தம் - சத்ரியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com