Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இலங்கை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரிமார் ஆணைக்குழு உள்ளிட்ட ஆறு அமைப்புகள், “பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி அவசியமானது. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முனைப்புக்களின் ஈடுபடவேண்டும்” என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பில், தற்போது கசப்பான சமிக்ஞைகளே வெளிப்பட்டு வருவதாக குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்தோடு, இலங்கையில் தற்போது நடைபெறும் விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் கைதுகள் இடம்பெறுகின்றமை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பலர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை, காணாமற்போனோர் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாமை போன்ற விடயங்கள் அதில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

சர்வதேசத்துடனான உறவுகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதும், அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குறித்த அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

இலங்கையின் இணை அனுசரணையுடன் கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் உள்ள விடயங்கள் செயற்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் முன்னேற்றங்கள் உள்ளடங்களான வாய்மூல அறிக்கையொன்றை, எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com