Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வழங்கும் வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். மாறாக, நீலிக்கண்ணீர் மாத்திரம் வடிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒற்றுமையாக இருப்போம் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என நேசக்கரம் நீட்டுகின்றார்கள். நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் தமிழ் மக்களை நோக்கி அவர்களின் குறைகளைக் களையும் நோக்கில் ஓர் அடி முன்னோக்கி வாருங்கள் நாம் பத்து அடி உங்களை நோக்கி வருகின்றோம் எனத் திரும்பத் திரும்ப கூறி வருகின்றோம்.

நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங் கிடக்கின்றார்கள்.

இது எப்போது நிறைவேறப்போகிறது என்று எமக்கும் தெரியாது அரசாங்கத்துக்கும் தெரியாது. தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இந்நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின் அவர்கள் அழியாத் தலைவர்களாக எம்மவர்களாலும் ஏன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன், இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாடமாக அமையட்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வழங்கும் வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com