Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை எழுத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பினை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, அங்கு கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிராகரிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆயினும், தான் பதவியிலிருக்கும் வரையில் சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டுக்கு இலங்கையில் இடமில்லை என்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று மாவை சேனாதிராஜாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்துள்ளதாவது, "இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு கட்டாயம் இருக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றது.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு, சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் போர்க்குற்ற விசாரணை உள்நாட்டில் நடக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன்தான் கடந்த வருடம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். இதற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அமைச்சர்களோ கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கக்கூடாது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில், ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். வெளிநாட்டு, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இலங்கையில் நடைபெறும் கலப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த 29ஆம் திகதி இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள வாய்மொழி மூல அறிக்கையிலும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். இதிலிருந்து பின்வாங்கமாட்டோம்; மாற்றத்தை ஏற்படுத்தமாட்டோம்.

ஏனெனில், சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பில்லாத உள்நாட்டு விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எமது இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு விரைவில் தெரிவிக்கவுள்ளோம்.

இதற்கு முன்னர் எமது இந்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்றுகூடி பேச்சு நடத்தவுள்ளன. இந்தப் பேச்சு ஓரிரு தினங்களில் நடைபெறும். இதன் பின்னரே ஐக்கிய நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடிதம் மூலம் தெரிவிக்கவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பினை வலியுறுத்தி ஐ.நா.வுக்கு கடிதம் எழுத த.தே.கூ முடிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com