Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையம் வவுனியா நகரிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குள் அமைய வேண்டும் என்று கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இடத்தினை தெரிவு செய்வது தொடர்பில் இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு காலம் கடத்தப்பட்டால், பொருளாதார மையத்துக்கென்று ஒதுக்கப்பட்ட நீதி திறைசேரிக்கு மீளச்செல்லும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வவுனியாவில் பொருளாதார மையம் அமைப்பதற்காக 20 கோடி ரூபா நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி திட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆயினும், குறித்த பொருளாதார மையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தையில் அமைப்பதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு உருவாகியுள்ளது.

ஒருதரப்பு தாண்டிக்குளம் என்றும், மற்றைய தரப்பு ஓமந்தை என்றும் வாதிட்டு வந்ததால் இந்த விடயம் கருத்துக் கணிப்புவரை சென்றது. இந்நிலையில், ஓமந்தைக்கு சார்பாகவே பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டுள்ளனர் என அறியமுடிகின்றது. இந்நிலையில், பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது பற்றி இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வவுனியா பொருளாதார மையம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் பி.ஹரிசன், "வவுனியாவில் பொருளாதார மையம் அமைவதை அங்குள்ள முதலமைச்சர் விரும்பவில்லைபோல்தான் தெரிகிறது. மக்கள் நடமாட்டமுள்ள அதேபோல் மக்களுக்கு இலகுவில் சேவைகளை பெறக்கூடிய இடத்திலேயே இது கட்டப்பட வேண்டும். இதனால்தான் வவுனியா நகரிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரையிலான இடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் இல்லாத - பேய்களுள்ள இடத்தில் எந்தவொரு கட்டத்தையும் கட்ட முடியாது. தாண்டிக்குளமா? ஓமந்தையா? என்பது மத்திய அரசாங்கத்துக்கு முக்கியமில்லை. குறுகிய தூரமே இங்கு கருத்தில்கொள்ளப்படும்.

குறிப்பாக வவுனியா நகரிலிருந்து ஒரு விவசாயிக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு நீண்டதூரம் செல்ல முடியுமா? அப்படியே ஓட்டோ பிடித்துச் சென்றாலும் செலவு அதிகரிக்கும் அல்லவா? எனவேதான், மக்கள் நலன் பற்றி சிந்திக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியோ அல்லது அநுராதபுரத்துக்கு செல்லும் வழியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீண்டதூரமாக அது இருக்கக்கூடாது. இந்நிலையில், இது விடயத்தில் இழுத்தடிப்பு இடம்பெற்றால் ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு மீளத் திரும்பிவிடும்.” என்றுள்ளார்.

0 Responses to பொருளாதார மையம் வவுனியா நகரிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைய வேண்டும்: பி.ஹரிசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com