Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதலின் போது இராணுவத்தின் இலக்கு பொதுமக்கள் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளே என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் பிடியுண்டிருந்த பொதுமக்களை மீட்கும் போரினையே இராணுவம் முன்னெடுத்தது. பொதுமக்களைக் கொன்று போரில் வெல்லும் தேவை இராணுவத்துக்கு இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துரைகள் தொடர்பில், கடந்த சில தினங்களாக பரவலான பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, இன்னும் ஒன்பது மாதங்களில், சர்வதேச நீதிபதிகள் இலங்கை வந்தடைவர் என்று ஊடமொன்றில் வெளியான தகவல் தொடர்பில், ஜனாதிபதி விளக்கமளித்திருந்தார்.

அந்த விளக்கத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, சர்வதேச நீதிபதிகள் வரவழைக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெளிவாகக் கூறியிருந்தார்.

அத்துடன், அவ்வாறு சர்வதேச நீதிபதிகளை வரவழைப்பதற்கான அனுமதியும் இலங்கை அரசியலமைப்பில் காணப்படவில்லை என்றும் அவ்வாறானதொரு அனுமதியைப் பெற இடமளிக்கப்போவதுமில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இறுதி மோதலின் போது பொதுமக்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தவில்லை. அது அவர்களது கொள்கையாகவும் இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட ரீதியில் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கலாம். அவை தொடர்பில் உள்ளக விசாரணைகள் நடத்தப்படும். அதற்காக, ஒருபோதும் சர்வதேச நீதிபதிகள் வரவழைக்கப்படமாட்டார்கள். இதுவே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தீர்மானமாகும். ” என்றுள்ளார்.

0 Responses to இறுதி மோதலில் இராணுவத்தின் இலக்கு பொதுமக்கள் அல்ல: மஹிந்த சமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com