Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை பொலிஸாரை நோக்கி வேகமாகச் செலுத்தி வந்ததாகவும், பொலிஸார் வான் நோக்கி சுட்டபோது ஒரு மாணவர் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததாகவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சாகல ரட்ணாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண பிரதேசத்தில் அதிகரித்திருக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக சம்பவதினம் இரவு முதல் காலை வரை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் ஒரு கட்டமாகவே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோது அதைத் தடுக்க முற்பட்டார்கள். ஏதும் குற்றச் செயலைச் செய்வதற்குச் செல்கிறார்கள் அல்லது செய்துவிட்டுச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர் .

கொக்குவில் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கிடைத்துள்ளது. முழுமையான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. கடந்த 20ஆம் திகதி இரவு 11.55 மணியளவில் இந்த சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் ஐந்து பொலிஸார் இரவுநேர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர இரு பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளதோடு வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அதனை நிறுத்துமாறு சத்தமெழுப்பியுள்ளனர்.

மாணவர்கள் பொலிஸாரை பயமுறுத்தும் வகையில் அவர்களை நோக்கி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸார் வான் நோக்கிச் சுட முயற்சித்தபோது அதிலிருந்து வெளியான துப்பாக்கிச் சன்னம் ஒரு மாணவர் மீது பாய்ந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அங்கிருந்த பொலிஸார் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற மாணவர் விபத்தினால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளனர்.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆவா குழு எனும் வாள் வெட்டுக் கும்பல் மறைவாக செயற்பட்டு குற்றச் செயல்கள், கொலை கொள்ளை என்பவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுவுடன் தொடர்புடைய பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பெயரில் கொக்குவில் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நியாயமானதும், வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்படும். சம்பவ நேரம் இரு பொலிஸ் அதிகாரிகளிடம் ரி56 ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. சப் இன்ஸ்பெக்டரிடம் சிறிய ரக துப்பாக்கியொன்று இருந்துள்ளது. சிவில் செயற்பாடுகளின்போது சிறிய ரக ஆயுதங்களை பொலிஸாருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to பொலிஸார் வானை நோக்கி சுட்ட போதே மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்: சாகல ரட்ணாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com