Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் கலப்புக்கள் ஏதுமின்றி அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கார்த்திகை மாதம் எமது மக்களுக்கு ஒரு புனிதமான காலம். இலங்கையில் தமிழின பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் இராணுவ அடக்குமுறை இடம்பெற்ற காரணத்தால் ஆயுதம் எடுத்து போராட வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக வரலாற்று நிகழ்வாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக இருந்தனர். அவர்கள் விடுதலை போரை நடத்தி வந்தார்கள். போராட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தமிழ் இனத்துக்காக ஆகுதி ஆகியவர்களின் நினைவு நாளாக மாவீரர் நாள் மதிக்கப்படுகிறது. அவர்கள் நினைவாக கார்த்திகை 21 தொடக்கம் 27 ஆம் திகதி வரை பல வகையிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலைக்காக போராடிய இனத்தின் சார்பில் தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வரலாற்று நிகழ்வாகும். எனவே, ஒவ்வொரு முறையும் மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள் மற்றும் அலுவலகங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம்.

ஆனால் அண்மைக் காலமாக இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக தலையீடும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவது மிகவும் துக்ககரமான செயற்பாடாக உள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் மனவேதனை அடைகிறார்கள்.

அத்துடன் இந்த நிகழ்வு நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எமது தமிழ் மக்கள் களியாட்டங்களிலும் ஈடுபடுவதாக அறிய வந்துள்ளது. இது துக்ககரமான விடயம். விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்தவர்களின் நினைவாக மேற்கொள்ளப்படும் புனித நிகழ்வில் இவ்வாறான களியாட்டங்களை, போட்டிகளை, அரசியல் இலாபங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

அனைவரும் இதை புனிதமாக அனுஷ்டிக்க வேண்டும். மாவீரரின் தியாகத்தை மதிப்பதாக இருந்தால் எந்தவிதமான அரசியல் கலப்புமின்றி அதற்குள் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மாவீரர்களின் உறவுகளுக்கு முக்கியத்துவமளித்து அவர்கள் தலைமையில் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாவீரர்களை மதிப்பவர்கள் துயிலும் இல்லங்கள் சென்று அஞ்சலி செலுத்தலாம்.

எனவே அனைவரும் ஒன்று பட்டு ஆன்ம ஈடேற்றத்துக்கு உரிய பிரார்த்தனை மேற்கொண்டு அமைதியான முறையில் வன்முறைக்கு இடமளியாமல் அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும். மாவீரர் குடும்பங்களை எப்பொழுதும் மதிப்பவர்களாக இருப்பதுடன் வாழ் நாள் முழுவது இந்த தியாகத்தை புரிந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com